திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனையை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்று ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கதிர் ஆனந்த்க்கு இந்தி தெரியவில்லை. ஒரு மொழிக்காக பாரத பிரதமரை அவமதிப்பது போல் பேசியது கண்டனத்துக்குரியது. இந்தி தெரியவில்லை என்றால் ஏன் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். இங்கேயே அவருடைய தந்தையை போல் சட்டமன்றத்தில் இருக்க வேண்டியதுதானே. ஏற்கனவே, இதே போன்று கேவி குப்பம் ஒன்றிய தலைவர் பேசிய கொச்சையான வார்த்தைகளுக்கு நாங்கள் போராட்டம் நடத்தி விட்டோம். இப்போது கதிர் ஆனந்த் அதேபோல் தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே, அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.