சென்னை, பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 415 மாணவர்கள் கடினமான சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த சாதனை கோல்டன் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது பேசிய நீதிபதி சுரேஷ்குமார், ’தமிழக பள்ளிகளில் யோகா பயிற்சியை கொண்டு வர வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ’கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி செயல்பட்டு வருகின்றோம். முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் வந்தால் அதனை பின்பற்றி செயல்படுவோம். தமிழகத்தில் கூட்டணி கட்சியாக உள்ள அதிமுக, பாஜக கட்சிகள் ஒருவரை ஒருவர் கண்டித்து வருவதோடு மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என்று அவர் கூறினார்.