ஆஸ்திரேலியா நாட்டில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு நுழைந்தது. இந்த நிலையில் இன்று அடிலெய்டில் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 ரன்னிலும், கேப்டன் ரோகித் ஷர்மா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், விராட் கோலி அணியை சரிவில் இருந்து மீட்டு 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதத்தோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். மறுபுறம் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஹர்திக்கின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. பின்னர் 169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்களாக வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹேல்ஸ் 28 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களால் இந்தக் கூட்டணியை பிரிக்க முடியவில்லை. கேப்டன் பட்லர் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.