குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காந்திநகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மோடியின் தாய்க்கு நாளையுடன் 99 வயது முடிவுற்று 100 வயது தொடங்கவுள்ளது. இதனையொட்டி இன்று குஜராத் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்க சென்றிருக்கும் மோடி, நாளை வரை அங்கேயே தங்கி இருந்து தாயாருக்கு வாழ்த்து கூற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், 100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் மோடியின் தாயாரை கவுரவிக்கும் நோக்கில், காந்தி நகரில் ’ரெய்சன் பெட்ரோல் பங்க்’ அமைந்துள்ள 80 மீட்டர் நீள சாலைக்கு ”பூஜ்ய ஹீராபென் மார்க்” என பெயரிட திட்டமிட்டுள்ளதாக காந்தி நகர மேயர் ஹிதேஷ் மல்வானா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பெயரை, அவர் பிறந்த மாவட்டமான திருவாரூரில் உள்ள சாலை ஒன்றுக்கு மாற்றி அமைக்கவுள்ளதாக அறிவித்து அது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் விமர்சித்த நிலையில், தற்போது பிரதமர் மோடியின் தாயார் பெயரை சாலை ஒன்றுக்கு வைப்பது திமுகவினரை கிள்ளிவிடும் செயலாக உள்ளது என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.