அரபு நாடான கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்காக கத்தார் விழாக் கோலம் பூண்டுள்ளது. போட்டிக்காக பிரமாண்டனமான முறையில் 8 மைதானங்கள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. முக்கியமான இடங்களில் உலக கோப்பை வீரர்களின் புகைப்படங்கள், ராட்சத கால்பந்துகள் மற்றும் உலக கோப்பை மாதிரிகள், விளம்பர போர்டுகள் கண்ணை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. உலக போட்டியை நேரில் கண்டு ரசிக்க மொத்தம் 15 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கத்தாருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்போட்டியில் 32 அணிகள் களம் காண்கின்றன. அந்த அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதுகின்றன. லீக் சுற்றில் நாக்-அவுட் என்ற 2-வது சுற்றுக்குள் 16 அணிகள் நுழையும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.341 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.243 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.219 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.203 கோடியும் வழங்கப்படும். போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி ஆகிய நேரங்களில் நடக்கிறது.