நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். பிரதமர் மோடி தொடர்ந்து 9ஆவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார். அப்போது 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி, செங்கோட்டையில் 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையில் செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்களுக்கு ‘வீடுதோறும் தேசியக் கொடி’ ஏற்றுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பலா் தங்கள் வீட்டிலும், பொது இடங்களிலும் தேசியக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனா்.