நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை (ஜூலை மாதம் 18ஆம் தேதி) நடைபெற்றது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அவர் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும். அதன்படி, நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை மாதம் 21ஆம் தேதி) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்றே முடிவு அறிவிக்கப்படும். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குக்களை பெற்று வெற்றிப்பெறும் வேட்பாளர் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25ஆம் தேதி பதவியேற்பார்.