பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்தப்பேட்டியில், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை சுட்டிக்காட்டினார். பின்னர், அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் எந்தவிதமான விதியாசமும் இல்லை. தலைவர்கள் மட்டுமே வேறு வேறு. தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி பல வெற்றிகளை பாமக பெற்றுத்தந்துள்ளது என்று அவர் பேசினார். முன்னதாக நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பேசிய அன்புமணி மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன் வைப்பதில் பாமக தான் இன்று தமிழ்நாடு மக்களுக்கு துணையாக உள்ளது. உண்மையான எதிர்க்கட்சியாக பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு நடவடிக்கைகளை பாமக எடுத்து வருகிறது என்றார். ஏற்கனவே தமிழகத்தின் எதிர்க்கட்சி அதிமுக-வா பாஜக-வா என்ற 2 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும் நிலையில் தற்போது பாமக கட்சியின் தலைவர் அன்புமணி தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று தொடர்ந்து பேசிவருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.