கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழப்பில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 கோரிக்கைகளை வலியுத்தி வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் கடந்த ஞாயிற்று கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், கடந்த திங்கள் அன்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவியின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட்டது. மேலும், மாணவியின் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் என 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று பிற்பகல் மாணவியின் உடல், மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த மறு உடற்கூறாய்வில் அரசு மருத்துவர்களுடன், மாணவியின் தந்தை மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர் இருக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், மாணவியின் தந்தை நேற்றைய மறு உடற்கூறாய்வின்போது பங்கேற்கவில்லை. எனினும், தங்கள் தரப்பு மருத்துவரை மறு உடற்கூறாய்வில் பங்கேற்க அனுமதி வழங்க டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் மாணவியின் தந்தை கோரிக்கைக்கு அனுமதி அளிக்காமல் வழக்கு விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, நேற்று மாலை மறு உடற்கூறாய்வு முடிந்த நிலையில், மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு அவரின் வீட்டின் முன் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். நோட்டீசை பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் இல்லாததால் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.