கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக கடந்த ஞாயிற்று கிழமை (ஜூலை மாதம் 17ஆம் தேதி) நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. அப்போது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, பள்ளி வாகனங்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறை வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர். இதனிடையே, போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதால், பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடந்த திங்கட்கிழமை (ஜூலை மாதம் 18ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
ஆனால், அரசு தரப்பில் எந்த பள்ளிகளும் விடுமுறை அளிக்கக்கூடாது என கூறப்பட்டு இருந்தது. இதையும் மீறி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகள் 18ஆம் தேதி வழக்கம்போல் இயங்கினாலும் 987 தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மாணவர்களின் பெற்றோர்களின் தொலைப்பேசி எண்ணிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எனினும், பள்ளி விடுமுறை எதற்காக என்ற காரணத்தை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், விடுமுறை கொடுத்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொண்டபோது, 18ஆம் தேதி விடுமுறை அறிவித்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாக கொண்டு பள்ளிகளை திறந்துவிடுவோம் என தனியார் பள்ளிகள் விளக்கம் அளித்தன. இந்த விளக்கத்தை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஏற்று கொண்டது. அதன்பிறகு, கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறிய மறுநாள் அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என தற்போது அறிவித்துள்ளது.