தமிழ் திரையுலக கதாநாயகன்களில் சாக்லெட் பாயாக அறியப்படுபவர் நடிகர் மாதவன். இவர், இயக்குநர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் தொடர் ஹிட் படங்களில் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக வலம் வந்தார். தற்போது, இயக்குநராக தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையக்கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள மாதவன் இந்த திரைப்படத்தை ஜூலை மாதம் 1ஆம் தேதி வெளியிட இருக்கிறார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் புரோமோஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ள படக்குழு, அங்கு 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன் ஒரு அங்கமாக, உலகின் மிகப்பெரிய விளம்பர பலகையான அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள நாஸ்டாக் பில்போர்டில் ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் மாதவம் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.