காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஏகனாபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் அரவிந்த் (25). இவர் வல்லம் வடகல் சிப்காட்டில் இயங்கிவரும் தனியார் இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் – சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில் பணிக்கு வந்து கொண்டிருந்தபோது மொளச்சூர் பகுதியில் முன்னால் சென்ற கனரக லாரியை முந்திச்செல்ல முன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது லாரி உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இந்த விபத்தில், அரவிந்த் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர், அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.