இந்தியா முழுவதும் ரயில்களில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி முதல் 2ஆவது வகுப்பு சாதாரண படுக்கை வசதி வரை எத்தனை கிலோ உடைமைகளை எடுத்துச்செல்லலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே பயணிகள் எவ்வளவு உடைமைகளை எடுத்துச்செல்லலாம் என்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவற்றின் மீதான கட்டுபாடுகள் அவ்வளவாக இருந்ததில்லை. ஆனால் இனி பயணிகளின் உடைமைகள் விஷயத்தில் மிகுந்த கண்டிப்புடன் இருக்கப்போவதாக ரயில்வே துறை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பயணிகள் அதிகமாக எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதில், குளிர்சாதன பெட்டிகளின் முதல் வகுப்பில் 70 கிலோ, 2ஆவது வகுப்பு 50 கிலோ, 3ஆவது வகுப்பு 40 கிலோ வரை உடைமைகளை எடுத்து செல்லலாம். 2ஆவது வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் யாரேனும் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிக எடைக்கொண்ட உடைமைகளை எடுத்துச்செல்வதை ரயில்வே துறை கண்டறிந்தால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் பயண தூரத்தைப் பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.