சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளை கொண்டாடி வருகிறோம். காந்தி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் நாள் இது. வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களையும் நினைவு கூர்கிறேன். பழங்குடியினத்தைச் சேர்ந்த பலரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். இந்தியா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். ஒவ்வொருவரின் தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய விடுதலைக்கு பாடுப்பட்ட வீரர்களின் பெருமையை பிரதமர் மோடி எடுத்துறைத்தார். தொடர்ந்து, சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும்போது நமது முக்கிய குறிக்கோள்களை அடைந்துகாட்ட வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும். நமது குறிக்கோள்கள், எண்ணங்கள் பெரிதாக இருக்க வேண்டும். கனவுகளை நனவாக்கக் கூடிய காலம்இது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவின் அடிமைத்தனத்தின் எந்த ஒரு அடையாளம் இருந்தாலும் அவை துடைத்தெறியப்பட வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். இயற்கையை பாதுகாப்பது மற்றும் மகளிர் நலன் ஆகியவற்றில் இந்திய கலாசாரம் முன்னணி வகிக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.