மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி, ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களை இந்திய அணி வென்றிருந்தது. இதையடுத்து நேற்றைய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய கேப்டன் ஷிகர்தவான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால், ஆட்டத்தின்போது மழை காரணமாக ஓவர் குறைக்கப்பட்டது. 36 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 225 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 35 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 26 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது. இதனால், டிஎல்எஸ் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியை இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே இந்த தொடரின் 2 போட்டிகளை கைப்பற்றி இருந்த இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரை முழுவதும் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தொடர் போட்டிகள் காரணமாக ஓய்வு தேவைப்பட்டதால், இந்திய அணியின் மூத்த விளையாட்டு வீரர்கள் யாரும் இந்த தொடரில் விளையாடவில்லை. எனினும், இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.