தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பப்பில் கடந்த மே மாதம் 28 தேதி நடந்த பிறந்தநாள் பார்ட்டி நடைபெற்றுள்ளது. இந்த பிறந்தநாள் பார்ட்டியில் அந்த பகுதியைச் சேர்ந்த பல அரசியல் மற்றும் செல்வாக்கு மிகுந்த செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சுமார் 180 பேர் பங்கேற்றுள்ளனர். அப்போது, பப்பில் பார்ட்டி முடிவதற்கு முன்பாக தனியாக வந்த 17 வயது சிறுமி ஒருவர் வீடு திரும்ப எண்ணியபோது அவரின் நண்பர்கள் 5 பேர் அவளை வீட்டில் விடுவதாக கூறி காரில் ஏற்றியுள்ளனர். பின்னர், பஞ்சாரா மலைப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அந்த சிறுமியை காரில் கூட்டிச் சென்ற 5 பேரும் இணைந்து காருக்குள்ளேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் மீண்டும் ஜூப்ளியில் உள்ள பப்பில் இறக்கிவிட்டுள்ளனர். அங்கு இருந்து தந்தையின் காரில் வீட்டுக்கு சென்ற மாணவியின் கன்னத்தில் இருந்த காயத்தை பார்த்து விசாரித்தபோதுதான் சிறுமிக்கு நடந்த கொடுமை அவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஜூப்ளி காவல்நிலையத்தில் சிறுமியை 5 நண்பர்கள் இணைந்து பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பத்தில் ஈடுபட்ட 5 பேரில் 3 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.