47ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று சண்டிகரில் தொடங்கி இன்றும் நடைபெற்று வருகிறது. மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் கால வரம்பை நீட்டிக்கக் கோரி இந்த கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுவித்து வருவதால் இது குறித்து இன்று விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்றைய கூட்டத்தில் ரூ.1000க்கும் குறைவான ஓட்டல் தங்கும் அறை வாடகைக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், அஞ்சலக சேவைகள், காசோலைகளுக்கும் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இன்றைய கூட்டத்தில் பேக்கேஜிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படாது என்றும், 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் (மேப்), சார்டுகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்.இ.டி., விளக்குகள், அச்சு மை, சூரியசக்தி வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான தலைகீழ் வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இத்துடன், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் நடத்தப்படும் சூதாட்டங்கள், குதிரை பந்தயம் உள்ளிட்டவை மீதான வரியை 28% வரை வரி விதிக்கலாம் என்று பல்வேறு மாநில அரசுகள் பரிந்துறைத்துள்ளது. இதன் மீதான அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்ப்பார்கப்படுகிறது.