ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே உயிரிழந்ததாக அந்த நாட்டு செய்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அபே பேசித் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவரின் பின் பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுடப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அபேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், 67 வயதான ஷின்ஷோ அபே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிசூடு சம்பவத்தை நிகழ்த்திய நபரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், உலக அளவில் அமைதியை விரும்பும் மற்றும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் துப்பாக்கியால் சுடப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷின்ஷோ அபே உயிரிழப்புக்கு உலக தலைவர்கள், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வருத்தம் தெரிவித்து கருத்து கூறிவருகின்றனர். இத்துடன், நாளை ஒரு நாள் ஷின்ஷோ அபேக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.