உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக அந்த நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போர் தற்போது வரை நீடித்து வந்தாலும் ரஷ்யா கைப்பற்றிய பெரும்பாலான பகுதிகளை மீட்கும் நோக்கில் முழுவீச்சில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கார் விபத்துக்குள்ளானதாக, அவரின் செய்தித் தொடர்பாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அதிபரின் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லேசான காயமடைந்த அதிபருக்கு உடனடியாக மருத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதிபரின் கார் ஓட்டுநருக்கே மருத்துவ உதவிகள் தேவைப்பட்டதால் அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்துத் தொடர்பாக உக்ரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமான, அதிபரின் மூளை என்று அழைக்கப்படும் அலெக்சாண்டர் டுகின் மகள் டார்யா டுகினா மாஸ்கோவில் புறநகர் பகுதியில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்ததுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.