சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு நாட்களில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியாவின் ஓபன் மற்றும் மகளிர்கள் நேற்று சற்று சறுக்கலை கண்டனர். ஓபன் பிரிவில் இந்திய சி அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 எனத் தோற்றது. இந்திய ஏ அணி பிரான்ஸிடம் 2-2 என டிரா செய்தது. இந்திய பி அணி மட்டும் இத்தாலியை 3-1 என வீழ்த்தியது. இந்த நிலையில் மகளிர் பிரிவிலும் இந்திய அணிகள் தடுமாறின. ஜார்ஜியாவுக்கு எதிராக இந்திய சி அணி, 1-3 எனத் தோற்றது. ஹங்கேரி, ஈஸ்டோனியா அணிகளை இந்திய ஏ, இந்திய பி அணிகள் தலா 2.5-1.5 என வீழ்த்தின. மேலும், ஓபன் பிரிவில் இந்தியா பி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஏ 7ஆம் இடத்திலும் இந்தியா சி 20ஆம் இடத்திலும் உள்ளன. அதேபோல, நான்கு சுற்றுகளுக்குப் பிறகு மகளிர் பிரிவில் இந்தியா ஏ, இந்தியா பி உள்பட எட்டு அணிகள் அனைத்து ஆட்டங்களையும் வென்றுள்ளன. புள்ளிகள் பட்டியலில் இந்தியா ஏ 4ஆம் இடத்திலும் இந்தியா பி 6ஆம் இடத்திலும் இந்தியா சி 28ஆம் இடத்திலும் உள்ளன. இதையடுத்து இன்று பிற்பகலில் தொடங்கிய இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.