தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித் என்ற முதல்தட்டு நடிகர்களுக்கென பல ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் வெவ்வேறு விதமான கதைகளையும், கதை களத்தையும் தன் விருப்ப நடிகரிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். பெரும்பாலும், முதல்தட்டு நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லப்படும் அனைவருமே கமர்சியல் படங்களின் மசாலா கலவையையே எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், இவர்களில் நடிகர் கமல் வேறு விதம். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து ஆரம்ப காலத்தில் இருந்தே தனது ரசிகர்களை அடுத்த தளத்துக்கு இட்டு செல்வதில் வல்லவர். அந்த வரிசையில், நடிகர் கமல் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. ஏற்கனவே விக்ரம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றில் நடித்து அசத்திய கமல் இப்போது மீண்டும் அதே டைட்டிலில் மற்றுமொரு திரைப்படம் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை மறுநாள் வெளிவர உள்ள நிலையில், திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கோபுரத்தில் திரையிடப்படுகிறது. நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.