பட்ட காலிலே படும் என்று ஒரு பழமொழி உள்ளது. அது தற்போது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நடிகர் விஷாலுக்கு சரியாக பொருந்தும். ராணா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் லத்தி திரைப்படத்தில் வீரமே வாகை சூடும் ரிலீஸ்க்கு பிறகு நடித்து வந்தார் விஷால். த்ரில்லரான காவல்துறையின் கதைக்கருவாக கொண்ட இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி, சுனைனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் லத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப்பெற்றது. இந்த நிலையில் லத்தி திரைப்பட சண்டை காட்சிகளின் படப்பிடிப்பின்போது பலத்த காயமடைந்த விஷால், சிறிது இடைவெளிக்கு பிறகு காயங்கள் குணமானதும் தனது காட்சிகளை நடித்துக்கொடுத்தார். இதையடுத்து, தற்போது, விஷால் நடித்து வரும் அடுத்த படம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’மார்க் ஆண்டனி’. இந்த திரைப்படத்தை ‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது மார்க் ஆண்டனி. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடந்த இந்த திரைப்பட படப்பிடிப்பில் மீண்டும் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, நடிகர் விஷாலுக்கு கட்டம் சரி இல்லை போல என்று கோலிவுட் வட்டாரங்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.