தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயளாரும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய ஈபிஎஸ், திமுக தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவுடன் காற்றில் பறக்கவிட்டுவிட்டுள்ளது, திமுக ஆட்சியில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி நடந்து வருகிறது என்றார். மேலும், தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. இங்கு நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர். ஸ்டாலின் குடும்பம் அதிகார மையமாக மாறியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின், மனைவி, மகன், மருமகன் தான் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.