சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அஇஅதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் கடந்த 11ஆம் தேதி சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நடந்தன. இதன் பிறகு வருவாய்த் துறை அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இத்துடன், அதிமுக அலுவலகம் மீது ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் தரப்பில் யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து வரும் ஜூலை 25ஆம் தேதி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீலை அகற்றுவது தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் சார்பில் தனிதனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இருதரப்பு வாதங்களையும் கேட்டார். இதனையடுத்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. மேலும், காவல்துறையும் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்தது. இந்தநிலையில், ஜூலை 11ஆம் தேதி அன்று என்ன நடந்தது என்பதை அறிக்கையாகவும் சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை நாளை(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.