இந்தியா முழுவதும் புதிதாக கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு சுமார் 9 ஆயிரம் வீதம் அதிகரித்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக புதிதாக கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, நேற்று 6 ஆயிரத்து 594ஆக குறைந்து இருந்த புதிய கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 2 ஆயிரத்து 228 அதிகமாகும். இதனையடுத்து, இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரம் வரை இந்தியா முழுவதும் 53 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அதேவேளையில், நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 088 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 15 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது.