ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் இந்திய தழுவலான ஆமிர் கானின் ‘லால் சிங் சத்தா’ இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதாநாயகியாக கரீனா கபூர், சிறப்புத் தோற்றத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மெதுவாகக் கற்கும் திறனுள்ள ஒரு மனிதனை பற்றிய இந்த திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதனால், எதிர்பார்த்ததை விட திரையரங்கத்தில் பார்வையாளர்கள் குறைந்து, வசூலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், திரையரங்குகளை குறைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சில ஆண்டுகளுக்கு முன் ஆமிர் கான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையானதை அடுத்து, அவரின் திரைப்படங்கள் வெளியாகும் போது பாய்கார்ட் என்ற ஹாஷ் டேக் உடன் திரைப்படத்தின் பெயரும் சேர்த்து ட்ரெண்ட் செய்யப்படும். அதேபோல ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்துக்கும் எதிர்ப்பு வலுத்ததால் முதல் நாளில் இந்த திரைப்படத்துக்கு இந்திய அளவில் ரூ.10.75 கோடி வசூல் மட்டுமே கிடைத்துள்ளது.