உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் ஒரு திருமணத்துக்கு முந்தையநாள் மாலை அனைத்து சடங்குகளும் முடிந்துள்ளன. அடுத்த நாள் காலை முக்கிய சடங்கான திருமண நிகழ்வு மட்டுமே நடைபெற இருந்தது. இந்தநிலையில், மணமகன் மண்டபத்திற்குள் நுழையும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தலையில் இருந்த ‘விக்’கும் கழன்று விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். இதனையடுத்து, மணமகளை அவரின் குடும்பத்தினர் சமாதானப்படுத்த முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் இந்த பிரச்சனையை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கும் மணமகள் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளாததால், மணமகள் வீட்டார் திருமணத்துக்கு செலவு செய்த பணத்தை மணமகன் வீட்டார் திருப்பித்தர ஒத்துக்கொண்டதை அடுத்து பிரச்சனையும், திருமணமும் முடிவுக்கு வந்தது.