சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை , சென்னை மாவட்ட பிரிவின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்களை நடத்துகின்றன. இப்போட்டிகள் முதல் முறையாக பொதுப்பிரிவு ,பள்ளி ,கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளுக்கும், மற்ற பிரிவுகளில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளுக்கு மொத்தமாக 25 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தியாகராய நகர் கண்ணதாசன் மைதானத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான கூடை பந்து போட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிலம்பம் போட்டி, அரசு ஊழியர்களுக்கான சதுரங்க போட்டி உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- சென்னை நேரு விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு மேல் வீரர்கள் பயிற்சி செய்ய விரைவில் அனுமதி வழங்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் விளையாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.