உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து முன்னேறி வரும் ரஷ்யா அந்த நாட்டில் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து, தெற்கு உக்ரைனில் உள்ள மைக்கோலைவ் நகரில் ரஷ்ய படைகள் அதிநவீன ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மைக்கோலைவ் நகரில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ரஷிய படைகள் அதிநவீன ஏவுகணைகளை கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தியதில் 350 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல் மைக்கோலைவ் நகரில் உள்ள தற்காலிக ராணுவ முகாமை குறிவைத்து நடத்திய தாக்குதல்களில் 70 வீரர்கள் மரணமடைந்தனர்” என குறிப்பிட்டுள்ளது.