சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்காக, அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தாண்டு கோடை காலத்தில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்து 117 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியை இன்னும் சில நாட்களில் அடைந்து விடும் என்பதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே தண்ணீரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர் மீது மலர் தூவி வரவேற்றார். முதற்கட்டமாக இன்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இன்று மாலைக்குள் 10,000 கன அடியாக உயர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஜூலை மாதத்தில் இருந்து 10,000 கன அடியில் இருந்து உயர்த்தி 16,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் நீர் தேவைக்கு ஏற்ப 18,000 கன அடியாகவும் உயர்த்தப்பட உள்ளது. பின்னர் வடகிழக்கு பருவ மழையைப்பொருத்து அணையில் இருந்து தண்ணீர் தேவைக்கு ஏற்ப உயர்த்தியும் குறைத்தும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.