ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை காண கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி பக்தர்கள் யாத்திரையை தொடங்கினர். வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அமர்நாத் ஆன்மீக யாத்திரை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டு இருந்தது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி முடிவடையும். அமர்நாத் பனிக்குகை யாத்திரைக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேலான பத்தர்கள் பதிவுசெய்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அமர்நாத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக குறுகிய நேரத்தில் அதிக அளவில் மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு உருவானது. இதில், அங்கு யாத்திரையில் ஈடுப்பட்டிருந்த பலர் சிக்கினர். இதனையடுத்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். இத்துடன், இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் இன்று மீட்பு பணியில் ஈடுபடவுள்ளன. இந்த நிலையில், மலை குடைகளில் சிக்கியுள்ள யாத்திரிகர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்காலிகமாக யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 30-40 பேர் காணாமல் போய் இருப்பதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுப்பட்டு உள்ளனர்.