பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையில் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று மாலை 5 மணி அளவில் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், 4 வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும், சம்பவம் நடந்தபோது, நிதிஷ்குமார் அந்த வாகனங்கள் எதிலும் பயணிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டு கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் என இதுவரை 11 பேரை அந்த மாநில காவல்துறை கைது செய்துள்ளது.