day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

போராளி

போராளி

பட்டாசுத்தொழிலின் ராணி!

சுபாஷினி

‘தீபாவளி’ என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுதான். ஆனால் பட்டாசு உற்பத்தி தொழிலோ தொடர்ந்து பாதிப்பில் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் இந்தத் தொழிலில் மேலும் இரு மடங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் போட்டியாக சீனப் பட்டாசுகள் ஒருபுறம் இறக்குமதி ஆகின்றன. இதைப்பற்றி இத்தொழிலில் தனித்து செயல்படும் ராணியாக இருக்கும் சுபாஷினி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பட்டாசு உற்பத்தித் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?
எனது தந்தை பட்டாசு உற்பத்தி ஆலை நிறுவனர். அவரின் உடல்நிலை சரியில்லாததால், நான் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இத்துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆகவே ஒரு மாத காலப் பயிற்சி மேற்கொண்டு, இத்தொழிலை நன்றாகக் கற்றுக்கொண்டேன்.
இத்துறையில் ஆண்களுக்கு மத்தியில் தனிப் பெண்ணாக எப்படி செயல்படுகிறீர்கள்?
பெண்ணாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்குள் இருந்தது. அதுவே, நான் எடுத்துக்கொண்ட தொழிலில் சாதிக்கத் தூண்டியது.
ஆண்கள் மட்டும் தான் இந்தத் தொழில் செய்ய வேண்டும் என்றில்லை. மனதில் தன்னம்பிக்கை இருக்கும் யார் வேண்டுமென்றாலும் இத்தொழிலைச் செய்யலாம் என்ற உறுதியோடு கடினமாக உழைத்தேன். இன்று, நான் உலகம் முழுவதும் பட்டாசுகளை விநியோகிக்கிறேன் என்று எண்ணுகையில் சந்தோஷமாக இருக்கிறது.
பட்டாசு உற்பத்தி தொழிலில் உள்ள சவால்கள் என்ன?
பட்டாசு தயாரிப்பதற்கு ஆயிரக்கணக்கான பொருட்கள்(material) தேவை. எல்லா பொருட்களையும் வாங்கி சேகரிப்பது என்பது மிகவும் நெருக்கடியான வேலை. ஆர்டர்(order) எடுக்கும்போது பல இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேரிடும். வட மாநிலங்களிலிருந்தும் உள்ளூர்களில் இருந்தும் ஆர்டர்கள் எடுக்கச் செல்லும்போது போட்டிகள் இருக்கும். பிற மாநிலத்திற்குப் பொருட்களை வாங்க செல்ல வேண்டியிருக்கும். அப்போது பல இடர்ப்பாடுகள் தோன்றும்.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பட்டாசு விற்பனை எப்படி இருக்கிறது?
மற்ற தொழில்களில் பொருட்கள் மாதம்தோறும் விற்பனையாகும். ஆனால், எங்களுக்கு வருடத்தில் ஒரு முறைதான். ஒரு வருடம் முழுவதும் தயாரித்த பட்டாசுகளை தீபாவளி அன்றுதான் விற்பனை செய்ய முடியும். கொரோனா காலகட்டம் என்பதால் 4 மாதங்கள் விற்பனை குறைவாக இருந்தது. அதனால் தொழிலாளர்கள் சாப்பாட்டிற்குக்கூட சிரமப்பட்டனர்.
தீபாவளி காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறீர்களா ?
கடந்த சில நாட்களாகத்தான் பட்டாசுகள் விற்பனையாகத் துவங்கி இருக்கின்றன. தீபாவளிக்குப் பட்டாசு விற்பனை நன்றாக இருக்கும் என்று அரசாங்கமும் சொல்லியிருக்கிறது. அதை வைத்து தீபாவளிக்குப் பட்டாசு விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சீனாவில் இருந்து வரும் இறக்குமதியை எதிர்கொள்வதற்கு எப்படித்தயாராக இருக்கிறீர்கள்?
எங்கள் பட்டாசுகள் கிரீன் கிராக்கர்ஸ். அதனால் நாங்கள் உற்பத்தி செய்யும் பட்டாசுகளில் உள்ள கெமிக்கல்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சீனப் பட்டாசுகளில் இருக்கும் கெமிக்கல்கள் மக்களுக்கும், விளை நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சீன பட்டாசுகளை இறக்குமதி செய்ய அரசாங்கமும் தடை விதித்திருக்கிறது. எனவே அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சட்டவிரோதமாக சில பொருட்கள் இந்தியாவிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இத்துறையில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவு இருக்கிறது?
நான் இத்துறையில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். அதுபோல் ஓரிரண்டு பெண்கள் தங்களது கணவர்களின் ஆதரவோடு இத்துறையில் நுழைய ஆரம்பித்துள்ளனர். மேலும் என்னிடம் இத்தொழிலை நீங்கள் எப்படி செய்கிறீர்கள், உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று என்னிடம் வந்த பெண்களும் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி எங்கள் பட்டாசு உற்பத்தி நிறுவனத்தில் 80% தொழிலாளர்கள் பெண்கள்தான்.
பட்டாசு உற்பத்தித் துறையில் பெண்கள் அதிக அளவு வேலை செய்கிறார்கள், அவர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்கிறீர்கள்?
தொழிலாளர் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். ரசாயனத்தை உபயோகிக்கும் தொழிலாளர்களுக்கு, அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை அறிவுறுத்துவோம். ரசாயனப் பொருட்களை வைத்து வேலை செய்பவர்கள் முக்கவசத்தை அணிந்து கொள்கின்றனர். ஆர்டினரி ஃபினிஷிங்(ordinary finishing) வேலை செய்பவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என்பதால் அவர்கள் தேவையான உடைகளை அணிந்து கொண்டு வேலையில் ஈடுபடுவர்.
பட்டாசு உற்பத்தித் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?
கிரீன் கிராக்கர்ஸ் முறை வந்ததாலும், சீனப் பட்டாசுகள் இல்லாததாலும் இத்தொழில் மேம்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், தீப்பெட்டி போல் ஆகிவிடக்கூடாது என்ற பயமும் இருக்கிறது. தீப்பெட்டி மெஷின் மேட் (machine made) ஆகிவிட்டது. இப்போதைய பட்டாசு உற்பத்தி முறை மேன் மேட் (man-made) ஆக இருக்கிறது. ஆனால் அடுத்த தலைமுறை படிக்க ஆரம்பித்ததால், தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் பட்டாசு உற்பத்தி துறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்னும் இந்தத் துறை எந்த அளவிற்கு வளர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
மூன்று வருட காலமாகப் பட்டாசுத் துறையில் நான்கு மாதம், மூன்று மாதம் என தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைக்கு வர வேண்டும். பட்டாசு வெடிக்கச் சொல்லி நன்றாகக் கொண்டாட வேண்டும். அப்போதுதான் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். எங்களுக்கும் தொழிலாளர்களுக்கு 100 சதவிகிதம் வேலை கொடுத்துவிட்டோம் என்ற திருப்தி இருக்கும்.
இந்த தொழிலுக்குள் வர வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எத்தனையோ சமூகப் பிரச்சினை களுக்கும், இடைஞ்சல்களுக்கும் இடையே தான் இந்த பிஸினஸில் இருக்கிறேன். இன்று என்னுடைய விருதுநகர் மாவட்டத்தில், 99 சதவீத பேருக்கு என்னைத்தொியும். மேலும் என்னால் 1000 குடும்பங்களை வாழ வைக்க முடிகிறது என்பது ஆனந்தமளிக்கிறது. ஆகையால் எல்லா பெண்களும் இந்தத் துறை என்றில்லாமல் எல்லா துறைகளிலும் முன் செல்லவேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!