day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்ணின் முடிவை ஆண் எடுக்கலாமா?

பெண்ணின் முடிவை ஆண் எடுக்கலாமா?

உலகில் குழந்தைத் திருமணம் செய்யப் படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று  கூறுகிறது யுனிசெஃப். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்படும்  சிறுமிகளில் பாதிக்கும் மேலானோர், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குழந்தைத் திருமணம் செய்து கொண்ட 3.6 கோடிப் பெண்கள் உத்தர பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது யுனிசெஃப்.பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியைத் தடுக்கும் வகையில், சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “நம் மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. நம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறப்பதைத் தடுக்க, சரியான வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பது அவசியம்” என்றார்.

 

பெண்ணுக்கு இடமில்லை

 

அதைத் தொடர்ந்து ஜெயா ஜெட்லி தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழுவை இதற்காக அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. ‘18 வயதில் திருமணம் செய்துவைப்பதால் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. பாலினச் சமத்துவம் பாதிக்கப்படுகிறது. தாய்-சேய் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு நிகராக உயர்த்துவதன் மூலம் இவற்றைக் களைய முடியும்’ என்கிறது ஜெயா ஜெட்லி குழுவின் அறிக்கை. இதைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 

 

இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த மசோதாவைக் கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. தற்போது இந்த குழுவில் 31 எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 30 பேரும்,பெண் எம்பி ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். பெண்களின் திருமண வயதை உயர்த்தும் நிலைக்குழு ஆய்வுக்குழுவில் ஆண்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால், பெண்களுக்குப் போதிய இடமளிக்கவில்லை என்பது தான் கேள்வி. 

 

ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா?

 

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சிவசேனா கட்சி எம். பி. பிரியங்கா சதுர்வேதி, “பெண்களின்  திருமண வயதை உயர்த்தும் மசோதா ஆய்வுக்குழுவில் பெண்களுக்கு போதுமான இடமளிக்காமல் இருப்பது கவலைக்குரியது.பெண்ணின் தலைவிதியை 30 ஆண் எம்பிக்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்களா ? பெண்களுக்கு என்ன வேண்டும் என்பதைக்கூட ஆண்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமா? பெண்களுக்கு ஏற்படுகிற பிரச்சினைகளைப் பெண்கள்தான் விவாதிக்க வேண்டும். எனவே, அந்தக் குழுவில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்” என்று  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா  நாயுடுவுக்கு  பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதியுள்ளார். 

 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “நாடாளுமன்றத்தில்  110 பெண்கள் உள்ளனர். இதில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் நிலைக்குழுவில் 30 ஆண் எம்பிக்களும், ஒரு பெண் எம்பியும் பெண்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து முடிவு செய்ய உள்ளனர். இதில்கூடப் பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிப்பார்களா?  இதையும் பெண்கள் வாய்மூடிப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.  சுஷ்மிதா தேவ், “இந்தக் குழுவில் பெண்கள் அதிகம் இடம் பெறாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரிடம் எடுத்துரைப்பேன்” என்று கூறியுள்ளார். பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில், “பெண்களுக்கான பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ஒரு மசோதவில் பெண்கள் அதிகமாக இடம் பெறுவதுதான்  சரியான முறை. இந்த மசோதாவைப்  பரவலான விவாதங்களுக்கு உட்படுத்தினால்தான் அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிந்து சட்டத்தை வடிவமைக்க முடியும்” என்றார். 

 

பெண்களுக்கு இடம் வேண்டும்

 

இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஜெயா ஜெட்லி பேசுகையில், “முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதா ஆய்வுக்குழுவில் 50 சதவீதப் பெண்கள் இல்லை என்றால் நியாயமாக இருக்காது. இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்கும் அனைத்துக் கட்சிகளையும் கேட்பது அவசியம். தங்களுடைய ஆண் எம்.பி.க்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பெண் எம்.பி.க்களை இந்தக் குழுவில் நியமிக்க பரிந்துரை செய்யுங்கள். அப்போதுதான் இதில் உள்ள சிக்கல்களைக்  களைந்து பெண்களுக்குத் தேவையானதைச் செய்ய முடியும்” என்றார்.   

 

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜோதிமணியும்  இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். “பெண்களின் திருமண வயதை 18 -ல் இருந்து 21 ஆக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு  மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில் 31 எம் பிக்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே பெண். மோடி அவர்களே எதற்கு ஒரே ஒரு பெண் உறுப்பினர்? பேசாமல் அவரையும் நீக்கிவிட்டால், ஆண்களே பெண்கள் வாழ்வு பற்றி முடிவு செய்துவிடலாம்! பெண்களுக்கு அறிவு கிடையாது, அவர்கள் அடுப்பங்கரைக்கும், பிள்ளை பெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக,  ஆர்.எஸ். எஸ். அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

 

பெண் எம்.பி.க்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் உட்படப் பலரும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்துவந்த நிலையில், மத்திய அரசு இது குறித்து  நடவடிக்கை எடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறது. பெண்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால், அந்த இடத்தில் பெண்கள் பேசினால்தான் அது குறித்த  புரிதல் உண்டாகும். சரியான முறையில் அந்தச் சட்டம் நடைமுறையாகும். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது அது தொடர்பாக உள்ளவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையிலும் எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இப்படியொரு சட்டம்  வெறும் கண்துடைப்புக்காக இல்லாமல்  பெண்களின் முழு ஆதரவும் இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதனால்,  நிலைக்குழுவில்  பெண் உறுப்பினர்களை நியமித்துச் சுதந்திரமான முறையில் அவர்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்து அவர்களுக்கான தேவையை அவர்களே உறுதி செய்ய வேண்டும். 

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!