day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்கள் வலுப்பெற்றால்தான் விடுதலை – ஜி.மஞ்சுளா

பெண்கள் வலுப்பெற்றால்தான் விடுதலை – ஜி.மஞ்சுளா

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் பொதுவெளிக்கு வரவும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் மாதர் அமைப்புகளே தொடர்ந்து போராடிவருகின்றன. இந்திய மாதர் தேசிய சம்மேளனமும் அப்படியான அமைப்புகளுள் ஒன்று. இந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜி. மஞ்சுளா, தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தான் கடந்து வந்த பாதை குறித்து ‘பெண்களின் குரல்’ வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.
குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?
என் அப்பா இல.கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்- லெனின்ஸ்ட்) அமைப்பு ஒன்றில் முழு நேர ஊழியராக இருந்தார். அப்பாவும் அம்மாவும் சடங்கு மறுப்புக் காதல் திருமணம் செய்துகொண்டனர். சென்னைதான் எங்களது பூர்விகம். அம்மா காகிதம் தயார் செய்யும் தொழிற்சாலையில் வேலைசெய்து எங்களை வளர்த்தார். எனக்கு இரு தங்கைகள். கம்யூனிஸ்ட் குடும்பம் என்பதால் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு, ஆணாதிக்கம் இல்லாதது, விரும்பியவரை மணம் செய்யும் உரிமை எனச் சுதந்திரமான குழந்தைகளாக நாங்கள் வளர்க்கப்பட்டோம்.
ஆனால், அம்மாவின் சம்பளம் மட்டுமே குடும்பத்திற்கான வருமானம் என்பதால் பத்தாவது முடித்ததுமே இரண்டு வருடங்கள் தொழிற்கல்வி (இயந்திரப்பட வரைவாளர்) முடித்துத் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பின் ஐந்து வருடங்கள் கழித்துத் திருமணம். காரைக்குடியில் கணவர் அரசுப்பள்ளி ஆசிரியர். அங்கு எனக்கு வேலைவாய்ப்பு எதுவுமில்லை. அதோடு சென்னையில் பிறந்து வளர்ந்த சூழலில் சென்னை வர விரும்பி கணவருக்கு மாற்றல் வாங்கி சென்னை வந்து விட்டோம். அதன் பின் மகன் பிறந்தான்.
எப்போதிருந்து அரசியல் களப்பணியில் ஈடுபட்டீர்கள்? அந்தப் பணி மாற்றத்தை ஏற்படுத்தியதா?
அரசியல் சூழலில் பிறந்து வளர்ந்திருந்தேன். அப்பாவின் மூலம் மார்க்சியம் அறிமுகமாகி மார்க்சியப் புத்தகங்கள் படித்துச் சமூக மாற்றத்திற்காக, ஏழை மக்களுக்காக அரசியல் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் இருந்தது. ஆனாலும் குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்தே நேரடியாகக் களத்தில் பணியாற்றும் சூழல் அமைந்தது. 1998 முதல் 2002 வரை அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் கழகம் (AIPWA) அமைப்பில் உறுப்பினராகிப் பெண்களின் பிரச்சினைகளுக்காகப் பணியாற்றினேன். அப்போது அம்பத்தூர் பகுதி கார்மெண்ட்ஸ் பெண் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவற்றை விளக்கித் துண்டுப்பிரசுரம் கொடுத்தல், நாடகங்கள் நடத்துதல், தெருமுனைக் கூட்டங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் பெண்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டோம். சூர்யோதயா என்ற அமைப்பின் வழியே மத்தியதரப் பெண்களுக்குச் சிறு பத்திரிகை மற்றும் நாடகங்கள் மூலம் பெண்ணுரிமை மற்றும் முற்போக்கு அரசியல் கருத்துகளைக் கொண்டு சென்றோம். இப்படித்தான் என் அரசியல் களப்பணி தொடங்கியது. அந்தக் களப்பணிதான் எனக்குச் சிறந்த பயிற்சியையும் அனுபவத்தையும் அளித்து என்னை வளர்த்தெடுத்துக்கொள்ள உதவியது.
அதன்பின் 2003 இல் இன்னும் பரந்து பட்ட மக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் மூத்த பத்திரிகையாளர் ஜவகர் அவர்களின் ஆலோசனை பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் (AIYF) இணைந்தேன். ஏற்கனவே களப்பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அதன் மாநிலத் துணைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றினேன். இளைஞர்களின் முக்கியப் பிரச்சினையான வேலையின்மை மற்றும் மணல் கொள்ளை, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை, கோக்-பெப்சி எதிர்ப்பு ஆகியவற்றிற்காகத் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கங்களை அக்காலகட்டத்தில் எங்கள் அமைப்பு முன்னெடுத்தது. ஆண்-பெண் பேதம் இன்றி எந்தவித இடையூறும் இன்றி இளைஞர் அமைப்பில் பணியாற்றியது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.
பெண்கள் அமைப்பில் இணைந்தது எப்போது? அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்
அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பான இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் (NFIW) மாநிலச் துணைச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் பணியாற்றியுள்ளேன். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அருணா ஆசப் அலி உள்ளிட்ட பல பெண் தலைவர்களின் முன்முயற்சியால் உருவானதுதான் இந்திய மாதர் தேசிய சம்மேளனம். சீர்திருத்தங்கள் மட்டுமின்றி பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும், பொருளாதாரீதியாக வலுப்பெற வேண்டும் என்பதைத் தொடர்ந்து இந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது. 1954இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பெண்களைப் பெரிதும் வாட்டும் வறுமையை ஒழிக்கவும், ஆணாதிக்கம், வரதட்சணைக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறைகள் ஆகிவற்றை எதிர்த்து அகில இந்திய அளவில் தொடர்ந்து போராடிவருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட குழந்தைத் திருமண தடைச்சட்டம், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் உட்படப் பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டதில் மாதர் சம்மேளனத்திற்குப் பெரும் பங்குண்டு.
தமிழகத்தில் நான் பணியாற்றத் தொடங்கிய காலகட்டத்தில் நாங்கள் இரு முக்கிய இயக்கங்களை முன் னெடுத்தோம். ஒன்று, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது. மற்றொன்று, சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப்படையினரால் பாலியல் வன்முறை உட்படப் பல்வேறு வன்கொடுமைகளுக்கும் சித்ரவதைகளுக்கும் ஆளான பழங்குடிப் பெண்களுக்கு நீதி கேட்டுப் போராட்டம். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்தும் தனித்தும் நாங்கள் நடத்திய போராட்டத்தினால் சதாசிவம் கமிட்டி அமைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரணங்களைத் தமிழக அரசிடம் இருந்து பெற்றுத் தர முடிந்தது. இந்த இயக்கங்களுக்காக அதை விளக்கிப் பிரசுரங்கள், டெல்லி சென்று உள்துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தல் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தினோம்.
ஏழை எளிய பெண்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, அரசு மருத்துவமனைகளின் சீர்கேடுகள், குடிநீருக்கான போராட்டம், வரதட்சணைக் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றிற்காகத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல போராட்டங்களை எங்கள் அமைப்பு நடத்தியுள்ளது. குறிப்பாகக் குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சீரழித்து, ஆண்களைக் குடிநோயாளராக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை எதிர்த்துப் பலகட்ட போராட்டங்களை முதலில் முன்னெடுத்த அமைப்பு எங்களுடையது.
மக்களைத் அச்சுறுத்திவரும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்க எப்படிச் செயல்படுகிறீர்கள்?
எங்கள் அமைப்பின் முன்முயற்சியால் இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து 2018 செப்டம்பர் 22 தொடங்கி அக்டோபர் 15 வரை இந்தியாவின் ஐந்து முனைகளிலிருந்து பெண்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட ‘அமைதிக்கான பிரச்சார இயக்கம்’ சிறப்பான இயக்கம். பாஜக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள்மீது அதிகரித்து வரும் வன்முறைகள், மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்கள்மீதான தாக்குதல்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் கல்வி நிலையங்களின் மீதான தாக்குதல், நம் நாட்டின் பன்மைத்துவம், பல்வகையான பண்பாடு ஆகியவற்றின்மீதான தாக்குதல் என நாடு முழுவதும் ஒரு அபாயகரமான நிலையும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சூழலும் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். அப்போது பல பெண்கள் அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளை ஒருங்கிணைத்து சென்னையில் கலைநிகழ்வுகளுடன் கருத்தரங்கம் நடத்தினோம். அப்போது ஒருங்கிணைந்த அனைவரும் தமிழகப் பெண்கள் பிரச்சனைக்காகத் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதால் இணைந்து செயல்பட விரும்பினர். அதனால் 2018 நவம்பர் 25ஆம் தேதி 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து ‘அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு’ சென்னையில் உருவானது. அதன்பின் அந்தக் கூட்டமைப்பின் மூலமாக பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிராக மனிதச்சங்கிலி போராட்டம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை, உத்தரப்பிரதேசம் ஹத்ராசில் தலித் பெண்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை, கொரோனா காலத்திலும் குறையாத பெண்கள்மீதான வன்முறை மற்றும் அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நிவாரணம் கோரி ‘இனியும் நாம் எழாவிட்டால்’ என்ற பிரச்சார இயக்கம் எனப் பல்வேறு இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய மாதர் தேசிய சம்மேளனம் முன்னெடுத்த ‘அமைதிக்கான பிரச்சார இயக்கம்’ மூலம் சென்னையில் ஒரு கூட்டமைப்பை உருவாக்க முடிந்துள்ளதை எங்கள் அமைப்பின் பெருமையாகக் கருதுகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கூட்டமைப்பை விரிவுபடுத்துவது குறித்துத் திட்டமிட்டு வருகிறோம்.
கொரோனா காலத்தில் களப்பணியாற்ற முடிகிறதா? ஊரடங்குக் காலத்தில் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
கடந்த 2019 அக்டோபரில் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், அதன் பிறகு கொரோனா காலகட்டமாக இருப்பதால் களப்பணிகள் குறைந்துள்ளது. இருப்பினும் கூட்டமைப்பின் அனைத்து இயங்கங்களிலும் பங்கெடுப்பது மட்டுமின்றி கொரோனா காலத்திலும் டாஸ்மாக்கைத் திறந்த தமிழக அரசைக் கண்டித்தும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் களப்பணியாற்றிவரும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், உடுமலைப்பேட்டை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கின் தீர்ப்பில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரியும், தனியார் நுண்நிதி நிறுவனங்களைக் கண்டித்தும் பல போராட்டங்களை இணையம் மற்றும் களத்தில் நடத்தி வருகிறோம். கொரோனா கால நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இன்றைய இளம் பெண்கள் பெண்ணுரிமை, அரசியலில் பங்கேற்பது, சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதில் ஆர்வமுடன் உள்ளதைக் காண முடிகிறது. இடதுசாரி அமைப்புகளில் இணையவும் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். தொழில்நுட்பமும், சமூக அக்கறையும் கொண்டுள்ள இளம் பெண்களைப் பெருமளவில் அமைப்புகளில் இணைக்கும்போதே சாதி, மதப்பழமைவாதங்கள் மற்றும் முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பை ஒழிப்பற்கான வலுவான ஒரு பெண்கள் இயக்கத்தை தமிழகத்தில் வளர்த்தெடுக்க முடியும். அதற்கு இளம் தலைமுறையினரிடம் மார்க்சிய பெரியாரிய கருத்தியலைக் கொண்டுசெல்வதும், களப்பணியில் அவர்களை அனுபவம் பெறச் செய்வதுமே என்னுடைய பொறுப்புக் காலத்தில் செய்து முடிக்க வேண்டிய பெரும் பணியாக, சவாலாகக் கருதுகிறேன்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!