day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

புத்தகம் என்றாலே ஆசைதான்! – பதிப்பாளர் காயத்ரி

புத்தகம் என்றாலே ஆசைதான்! – பதிப்பாளர் காயத்ரி

புத்தகப் பதிப்பில் ஒரு பெண்ணா? இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. உலகம் முழுக்க இந்தத் துறையில் பல பெண்கள் இருக்கிறார்கள். தமிழில் ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் உரிமையாளர்களில் ஒருவரான காயத்ரி பதிப்புத் துறையில் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்கிறார். தரமான புத்தகங்களை வெற்றிகரமாக விற்பது சவால்தான் என்று கூறுகிறார் காயத்ரி. தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்களைப் பதிப்பிக்கிறார் காயத்ரி.

புத்தகப் பதிப்பின்மீது எப்படி ஆர்வம் வந்தது?

எனக்கு ரொம்ப காலமாகப் பதிப்புத் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிரெஞ்சு பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். தமிழ் எழுத்தாளர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஆழப் பதிந்தது. 2017 ஆம் ஆண்டு நான்  என் நண்பர் ராம்ஜி மற்றும் எழுத்தாளர் சாரு நிவேதிதா மூவரும் ஒரு புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். அங்கு சாருவின் புத்தகங்கள் குறைவாக இருந்ததால் அவர் மனம் வருந்தினார். நாம் ஒரு பதிப்பகம் உருவாக்கலாமே என ராம்ஜி கூற, நானும் உடனே தலையசைக்க எனது கனவு நிறைவேறியது.

0° ஏன்? அந்தப் பெயரில் நாவல் எழுதிய சாரு நிவேதிதாவுக்கு விளம்பரமா?

எழுத்தாளர் சாருவுக்கு விளம்பரம் தேவையில்லை என நினைக்கிறேன். பதிப்பகம் உருவாக்கலாம் எனும்போது சாரு அவருடைய எல்லாப் புத்தகங்களையும் எங்களிடம் கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தினார். எனவே மரியாதையின் அடையாளமாக ஜீரோ டிகிரி பதிப்பகம் என வைக்கலாம் என்று எண்ணினேன். 

நவீன படைப்புகளுக்கும் பாரம்பரிய படைப்புகளுக்கும் வேறுபாடு காண்கிறீர்களா?     

சொல்லும் முறையில்தான் வேறுபாடு உள்ளதாகக் கருதுகிறேன். காலத்திற்கு ஏற்றாற் போல பேசுபொருள் மாறி இருப்பதாக தான் சொல்ல வேண்டும். தற்போது கருத்தை தைரியமாக வெளிப்படையாகவே கூறுகிறார்கள். நவீன படைப்புகளில் மிகப்பெரிய புரட்சி உண்டாகி உள்ளது. மொழி என்பது மிகப்பெரிய கிடங்கு. அதிலிருந்து நான் ஒரு சொல்லை எடுத்து சொல்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான வரலாறு இருக்கிறது. அதைக் கொண்டு மிகவும் அழகாகவே விளையாடலாம். அந்தக் காலத்தில் நான் கொடுக்கிறேன் நீ எடுத்துக் கொள் என்பது போல கருத்து இருந்ததாகக் கருதுகிறேன். இப்பொழுது அந்தக் கருத்து உடைந்துவிட்டது.

எது சந்தை? கலையா? தரமா? விற்கும் சரக்கா?

ஒரு சந்தைக்கு கலை, தரம், விற்கும் சரக்கு மூன்றுமே இருக்க வேண்டும். இவை மூன்றும் சரிசமமாக இருக்க வேண்டும். கலை என்பது விற்பனைக்கு செல்லும்போது அது ஒரு பண்டமாக கருதப்படுகிறது. பண்டம் எனும்போது அதன் தரம் மற்றும் அனைத்துமே நன்றாக இருக்க வேண்டும்.

புத்தகப் பதிப்புத் தொழில் லாபகரமானதா?

இது லாபகரமான தொழில் இல்லை. ஒரே நேரத்தில் பத்தாயிரம் பிரதிகள், இருபதாயிரம் பிரதிகள் என்று அச்சடிக்கும் காலம் வரும்பொழுது லாபகரமானதாக மாறும். முதலில் இதை நான் தொழிலாகவே கருதவில்லை. இது என்னுடைய அதீத வேட்கை. உண்மையில் சொல்லப்போனால் பதிப்பகம் தொடங்கியது முதல் இன்று வரை சம்பளம் என்று நானோ என் சக உரிமையாளர் ராம்ஜியோ  எடுத்துக்கொள்ளவில்லை. மாதம் 20,000 ரூபாய் கையில் நின்றாலே மிகவும் அரிது. ஆனால் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். எனக்கு என்ன பிடித்ததோ அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். இலக்கியம் மீது அதிக பற்று உள்ளவர்கள் மட்டுமே இத்தொழிலுக்கு வருவார்கள். இத்தொழிலில் இருக்கிறார்கள்.

நீங்கள் எம்மாதிரியான புத்தகங்களைப் பதிப்பிக்கிறீர்கள்?

எந்தப் புத்தகமாக இருந்தாலும் அது இலக்கியத் தரம் வாய்ந்த புத்தகமாக இருக்க வேண்டும் என விரும்புவேன். ஒரு கதை என்பது ஆரம்பம் முதல் இன்பமான முடிவு என்று ஒரு வட்டத்தில் இருக்கக் கூடாது. சில இடங்களில் கதையை இல்லை என்றாலும் அது ஒரு ஆழமான தாக்கத்தைத் தரவேண்டும். ஒரு ஆழமான தத்துவத்தை, கருத்தை உணர்த்தும் கதையினைத்தான் கண்டிப்பாகத் தேர்ந்தெடுப்பேன்.

கொரானாவுக்குப் பிறகு பதிப்புத் துறை உயிர்ப்புடன் இருக்க முடியுமா?

கொரானா காலத்தில் கஷ்டமாகவே உள்ளது. ஆனால் இக்கால கட்டத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாகவே கருதுகிறேன். இந்த சமயத்தில் e-books அதிகமாக வளர்ந்துள்ளது. அச்சுப் பதிப்பை விட e-booksக்கு மார்க்கெட் அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் அச்சுக்கு மதிப்பு உண்டா?

எனக்கு அச்சடித்த புத்தகங்களைப் படிக்கத்தான் பிடிக்கும். என் தலைமுறைக்குப் பிறகு அச்சில் வரும் புத்தகங்களைப் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கும் எனக் கருதுகிறேன். காரணம் என் குழந்தைகள் மற்றும் இக்காலக் குழந்தைகள் கிண்டில் போன்றவற்றையே விரும்புகிறார்கள். நான் ஆயிரம் புத்தகங்களை வைத்து இருக்கிறேன் என சொல்கின்றனர். 

 உங்களுள் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்கள் என்ன?

துளசி,  Charu Nivedita’s    Zero Degree,  James Herriott’s All Things Wise And Wonderful,  Anne Hébert’s Le Torrent,  தி. ஜானகிராமன் எழுதிய செம்பருத்தி,  க.நா.சு. எழுதிய பொய்த்தேவு,  Tarun Tejpal’s The Valley of Masks , Mario Vargas Llosa’s The Feast of the Goat.

மொழி என்பது ஒரு கலையா, அறிவியலா அல்லது அறிவு சம்பந்தப்பட்ட விஷயமா?

மொழி என்பது கலை சம்பந்தப்பட்டதாகவே கருதுகிறேன். அதனால்தான் மொழியை அறிவியலுக்குக் கீழ் கொண்டு வராமல் கலைக்குக் கீழ் கொண்டு வருகிறோம்.

அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்கள் குறித்து?

மொழியைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு மொழியின் மீது பேரார்வம் மற்றும் விடாமுயற்சியும் அதிகமாக இருக்க வேண்டும். 

எந்த மொழி உங்களுக்கு மிகவும் பிடித்தமானது?  

எனக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு தான். ஹிந்தி ஏதோ ஒரு அளவுக்குத் தெரியும். பிடித்தது எனக் கேட்டால் அப்படி ஒன்று இல்லை. எல்லா மொழியும் அவ்வளவு அழகு. என்னை வெளிப்படுத்திக்கொள்ள சுலபமானதாக உள்ள மொழி தமிழ்தான்.

ஒரு பெண்ணாக, பெண்ணியத்திற்கான உங்கள் பங்களிப்பு என்ன?

     என்னுடைய அலுவலகத்தில் என் சக உரிமையாளர் ராம்ஜி தவிர மற்ற அனைவருமே பெண்கள்தான். பெண்களோடு வேலை செய்யும் போது நான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறேன். இங்கு ஆண், பெண் விடுதலை என்பது பிரச்சினை இல்லை. அதிகாரம்தான் பிரச்சனை. இங்கு யார் யாருக்கு அடங்கிப் போவது என்ற அதிகாரமே பிரச்சினையாக நான் கருதுகிறேன்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!