day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பழங்குடியினர் வாழ்வைச் சிதைக்க வேண்டாம்! -நவீனா அமரன்

பழங்குடியினர் வாழ்வைச் சிதைக்க வேண்டாம்! -நவீனா அமரன்

பழங்குடி இனக் குழந்தைகளின் வாழ்க்கைத் திறனை சிதைக்காத கல்வி முறையை அறிவுறுத்தும் திட்ட வடிவத்தை தயாரித்ததற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வழங்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை பேராசிரியர் நவீனா அமரன் பெற்றிருக்கிறார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நவீனா அமரன் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆப்பிரிக்க பெண் எழுத்துக்கள் பற்றி அவர் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இரண்டு ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளையும், தமிழில் ‘லிலித்தும் ஆதாமும்’ என்ற நூலையும் நவீனா வெளியிட்டிருக்கிறார். 

நவீனா அமரன் பிறந்த ஊருக்கு அருகில் சிறு வயதில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்ததை பார்த்துக் கடந்து சென்றிருக்கிறாராம். அவருடைய அம்மா பள்ளி ஆசிரியர். அவருடைய பள்ளிக்கு அடிக்கடி செல்லும் சூழல் நவீனாவுக்கு அமைந்தது. அது மலையடிவாரத்தில் அமைந்த பள்ளி என்பதால் அங்கு பழங்குடியின குழந்தைகள் அதிகம் பயின்று வந்தார்கள். அவர்களுடன் உரையாடவும் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நவீனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. நவீனா பிஏ ஆங்கிலம் பயின்று கொண்டிருந்தபோது, விரிவாக்கப் பயிற்சிக்காக தனது கல்லூரிக்கு அருகில் அமைந்த கிராமம் ஒன்றிற்கு மூன்று ஆண்டுகள் செல்லும்படி நேர்ந்தது. அந்து ஊர் முழுவதும் பழங்குடியின மக்கள்தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய வாழ்வியலை, பழக்கவழக்கங்களை, கட்டுப்பாடுகளைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்துகொண்டாராம் நவீனா. பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்க்கைத் திறன் எப்படி இருக்கிறது என்று ஆராய நவீனா அப்போது முடிவு செய்தாராம். 

முனைவர் பட்ட மேற்படிப்புக்காக ஆப்பிரிக்கப் பெண்களின் நாவல்களை ஆய்வு செய்தபோது புச்சி எமச்சேட்டா எனும் ஆப்பிரிக்க பெண் எழுத்தாளர் ஆப்பிரிக்க பழங்குடியினரின் வாழ்க்கைத் திறன்களைப் பற்றி தனது நாவலில் அதிகமாகப் பேசியிருப்பதை நவீனா படித்தாராம். ’தற்கால நவீன கல்வி முறை ஏதோ ஒரு வகையில் பழங்குடியினரின் வாழ்க்கைத் திறனை சிதைத்துவிட்டது,’ என்று அந்த எழுத்தாளர் கூறுவது நவீனாவை மிகவும் பாதித்தது.

நம் தமிழ்நாட்டிலும் நவீன கல்வி பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கைத் திறனையும் சிதைத்திருக்கக் கூடும் என்று நவீனா கருதினாராம். இதற்காக ஒரு ஆய்வு மேற்கொள்வது அவசியம் என்று அவர் முடிவு செய்தாராம்.

ஆய்வின்போது பழங்குடியின மாணவர்களுடன் எந்தவிதமான உரையாடலை நவீனா மேற்கொண்டார் என்று கேட்டபோது, ‘அவர்களுடன் அதிகமாக உரையாட முடியாது. அவர்கள் இறுக்கமாக இருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடும்போது நிறையச் சிக்கல்கள் இருந்தன. புகைப்படம் எடுப்பதைக்கூட அவர்கள் விரும்பவில்லை,’ என்று கூறுகிறார். 

நவீன கல்வி முறை ஒரு விதமான எதிர்மறை எண்ணத்தை பழங்குடியின குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தியிருக்கிறதாம். 

‘முன்பு பெண்கள் அரிசியில் கல் இருந்தால் தனியாக அரித்து எடுக்கும் திறன் பெற்றிருந்தார்கள். ஆனால் நவீன கல்வி முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் இப்போதைய பெண்கள் பெரும்பாலும் இதைத் தெரிந்துகொள்ளாமலே விட்டுவிட்டார்கள். இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினருக்கு நிச்சயமாக இன்னும் அதிகமாக வாழ்க்கைத் திறன் இருக்கும்,’ என்கிறார் நவீனா.

மரம் ஏறுதல், குறி பார்த்து ஈட்டி எறிதல், ஆற்றில் போகும் மீனை எந்த உபகரணமும் இல்லாமல் பிடித்து எடுப்பது, எந்த மரம், எந்தப் பட்டை, எந்தத் தாவரம், எந்த மூலிகை எதற்கு மருந்தாகப் பயன்படுகிறது என்ற அறிவு, விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் திறன் என்பன போன்ற பல அம்சங்கள் பழங்குடியினக் குழந்தைகளிடம் இருக்கின்றனவாம். இவை எல்லாம் நவீனாவை ஆச்சர்யப்படுத்தியதாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடம் அசாத்தியமான துணிவு இருந்ததை நவீனா உணர்ந்துகொண்டாராம். ஆனால் நவீன கல்வி முறை அந்தத் துணிவை நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று பதிவு செய்கிறார் அவர்.

நவீனா அமரன் ஒரு முறை பழங்குடியினர் வீட்டில் சென்று தங்கியிருந்தாராம். அந்தக் குறிப்பிட்ட பழங்குடியினம் கல்வியில் நல்ல மேம்பாடு அடைந்த இனம் ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் பணிபுரிகிறார்கள். அவர்கள் வீட்டில் குளியலறையில் வெளிநாட்டு ஷாம்புக்கள்தான் பயன்படுத்துகிறார்களாம். அந்த வீட்டில் இருந்த ஒரு மூதாட்டி வேகமாக நவீனாவிடம் வந்து ஹேர் ட்ரையரை எடுத்துக் கொடுத்து, அதை வைத்துத்தான் முடியைக் காய வைக்க வேண்டும் என்று சொன்னாராம். துண்டால் துவட்டினால் போதும் தானாகவே காய்ந்துவிடும் என்று நவீனா கூறினாராம். ’ஹேர் ட்ரையர் போட்டுத்தான் முடியைக் காய வைக்க வேணும். அப்போதான் அது நல்லா காயும். துண்டால் காய வைப்பது பழைய பழக்கம்,’ என்று அந்த மூதாட்டிச் சொன்னபோது அதிர்ந்துபோனாராம் நவீனா.

இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து பழங்குடியினர் எந்த அளவுக்கு விலகிச் சென்றுவிட்டார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய அம்சம் என்று நவீனா கூறுகிறார். புற்றுநோய் போன்ற நவீன நோய்கள் தாக்காத இனமாக பழங்குடியினர்கள் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் இயற்கை வாழ்க்கைதான். செயற்கையான வாழ்க்கை முறை அவர்களைப் பாதிக்காத காரணத்தினால்தான் அவர்கள் நோய்களால் தாக்கப்படாத நிலையில் இருந்தார்கள். அப்படிப்பட்ட இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்து நவீன கல்வி முறை அவர்களை விலக்கிவிட்டது கவலைக்குரிய அம்சம் என்று நவீனா கருதுகிறார். 

கல்வி ஒரு மனிதனை முழுமையானதாக ஆக்க வேண்டும். ஒரு மனிதனை பண்பட்டவனாக ஆக்க வேண்டும். ஆனால் நவீனக் கல்வி முறை, பழங்குடியினரின் கலாச்சாரத்தை அவர்கள் எதிர்மறையாகப் பார்க்கும்படி செய்துவிடுகிறது என்று நவீனா கூறுகிறார்.

’பொதுவாகவே கல்வி முறை மூலம் ஒரு சில பணிகளே சிறந்தவை என்ற மனப்போக்கு உருவாக்கப்பட்டுவிடுகிறது. மற்ற பணிகள் மீது ஒரு தாழ்வுமனப்பான்மை வந்துவிடுகிறது,’ என்கிறார் நவீனா அமரன். 

’பழங்குடியினர் தங்கள் பழக்கவழக்கங்களையே எதிர்மறையாக நினைக்கும்படி நவீன கல்வி முறை உருவாக்கிவிடுகிறது. உடன் பயிலும் பழங்குடியினர் அல்லாத மாணவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தை உயர்த்திக் கூறும்போது பழங்குடியின மாணவர்களிடம் இயல்பாகவே ஒரு தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது,’ என்று பதிவு செய்கிறார் நவீனா அமரன்.

 உண்மையில் பழங்குடியின மாணவர்களுக்கு பழங்குடியினர் அல்லாத மாணவர்களைவிட அதிகத் திறமைகள் இருக்கின்றன. ஆனால் அதன் தனிச் சிறப்பை அவர்களே உணராத வண்ணம் இந்தக் கல்வி முறையும் பாடத்திட்டமும் செய்துவிடுகின்றனவாம். 

கவணில் கல் வைத்து எறிதல் போன்றவற்றில் பழங்குடியின மாணவர்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் கல்வி முறையில் அதற்கான எந்த முக்கியத்துவம் கொடுக்கப்படு வதில்லை. ஆசிரியர்கள்கூட அந்தத் திறனை மதிப்புக் குறைவாகவே பார்க்கிறார்கள் என்கிறார் நவீனா. 

‘ஆனால் பெரிய பள்ளிகளில் வில் வித்தை போன்றவை கூடுதல் விளையாட்டு அம்சங்களாகக் கற்றுத் தரப்படுகின்றன. அதற்குத் தனியாக கட்டணமும் வசூலிக்கப் படுகிறது. இயற்கையாக அந்தத் திறன் இல்லாத குழந்தைக்கு அது கற்றுத் தரப்படுகிறது. வெறும் பெயருக்காக இந்தத் திறன் கற்றுத் தரப்படுகிறதோ’ என்று சந்தேகம் எழுப்புகிறார் நவீனா அமரன்.

எது போன்ற கல்வி முறை தேவை என்று கேட்டால், ‘வாழ்க்கைத் திறன் சார்ந்த கல்வி முறை தேவை. ஃபின்லாந்து போன்ற நாடுகளில் இது போன்ற கல்வி முறைதான் இருக்கிறது. முக்கியமாக எல்லோருக்கும் இது போன்ற கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது,‘ என்கிறார்.

பழங்குடியினர் அல்லாத மாணவிகள் சிரமப்படும்போது அவர்கள் வீட்டில் மிளகாய்ப் பொடி, வத்தல் பொடி போன்றவற்றைச் செய்து வந்து கல்லூரியில் விற்கலாமே என்று ஆலோசனை கூறுவாராம் நவீனா அமரன். அப்போது அந்தக் கல்லூரி மாணவிகள், ‘எனக்கு யார் கிட்ட பேசத் தெரியும் மேடம்?’ என்று கலக்கம் தெரிவிப் பார்களாம். 

படிக்காத பெண்கள் கூட சாலையோரத்தில் பூக்கடை, பழக்கடை போட்டு தன்னிடம் இருந்த பொருட்களை விற்பனை செய்துவிடுகிறார்கள். ஆனால் படித்த பின்னால் தன்னால் பேசத் தெரியவில்லை  என்று பெண்கள் கூறுகிறார்கள் என்று நவீனா சுட்டிக் காட்டுகிறார்.

கல்வி என்ன செய்கிறது என்று கேள்விகளை முன் வைக்கிறார் நவீனா. கல்வி மாணவர்களின் முழுத்திறனை உறிஞ்சிவிடுகிறதா என்று அதிர்ச்சி காட்டுகிறார் அவர்.  ‘முதலில் பழங்குடியின, பழங்குடியினர் அல்லாத மாணவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். பழங்குடியினரின் வாழ்க்கையை மறுக்கும் மனப்போக்கை அரசாங்கமும், சமூகமும் கைவிட வேண்டும். பழங்குடியினரின் அம்சங்களை அழித்து புதிதாக எதையும் திணிக்கக் கூடாது. அவர்களிடம் இருப்பவற்றை வளர்த்தெடுக்க முடியுமா என்பதை ஆராய்ந்து கல்வி முன் செல்ல வேண்டும்,’ என்று ஆலோசனை கூறுகிறார் நவீனா அமரன். 

இருபத்தைந்து பாடங்களைத் திணிக்க நினைக்கும் கல்வி முறை, எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து கற்க வந்திருக்கும் பழங்குடியினரிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் சிந்திப்பதில்லை என்று கேள்வி எழுப்புகிறார் அவர். ‘அவர்களிடம் ஜாதி இல்லை, பணக்காரன், ஏழை என்ற வேறுபாடு இல்லை. அளவுக்கு அதிகமான சொத்து சேர்க்கும் தன்மை இல்லை. மற்றவர்களைக் கெடுக்கும் தன்மை இல்லை. இது போன்ற நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ள கல்விமுறை தயார் ஆக வேண்டும்,’ என்று முடிக்கிறார் நவீனா அமரன்.

வரும் காலங்களில் பழங்குடியின மக்களுக்கான வாழ்க்கை பற்றிய பல அம்சங்களைப் பதிவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார் நவீனா அமரன்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!