day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நானும் பாலியல்  சீண்டலுக்கு உள்ளாகி இருக்கேன் – நடிகை செம்மலர் அன்னம்

நானும் பாலியல்  சீண்டலுக்கு உள்ளாகி இருக்கேன் – நடிகை செம்மலர் அன்னம்

 

சினிமா என்றால் அழகும், வசீகரமும் இருக்க வேண்டும் என்பதை தன்னுடைய யதார்த்தமான நடிப்பு திறமையால் உடைத்துள்ளார் செம்மலர் அன்னம். இயக்குநராக வர வேண்டும் என்ற கனவுகளோடு திரைப்படத்துறையை நோக்கி வந்தவருக்கு, நடிப்பு இயல்பாக வரவே அழுத்தமான கதாபாத்திரங்களில் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் நடித்த ‘செந்நாய்’ படத்துக்காக ‘வளரிளம் திரைக் கலைஞர்’ விருதைப் பெற்றுள்ளார். அதேபோன்று ம்ம்ம் திரைப்படமும் ஆஸ்கரில் திரையிடப்பட்டது. நடிப்பு, இயக்கம், குடும்பம் என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் அவரிடம்  சில கேள்விகள்…

 

“திரைத்துறைக்குள் உங்களுடைய அறிமுகம் எவ்வாறு இருந்தது. அதைப் பற்றி சொல்லுங்க?”

  “இயக்குநராக வரவேண்டும் என்பது எனது ஆசை. ‘கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். கல்லூரி பாடத்திட்டத்துக்காக வரிசையா பல குறும்படங்கள் பண்ணேன். அப்போதான் வஸந்த் சார் எங்க கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினரா வந்தார். என்னுடைய ‘மலர்மதி’ என்கிற குறும்படத்தைப் பார்த்துட்டு, ‘இது விருதுக்குத் தகுதியான குறும்படம்’ என்று பாராட்டினார். ‘மலர்மதி’க்கு மாநில அளவில் சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசைன்னு மொத்தம் மூன்று விருதுகள் கிடைச்சது.

என் படத்துல உதவி இயக்குநரா வேலை பார்க்குறீங்களா?’ன்னு கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டு சென்னைக்கு வந்து அவருடன் பணியாற்றினேன்.  பதினைந்து நாள் வேலை போச்சி. அதன் பிறகு அந்தத் திரைப்படம் நிறுத்தவேண்டிய நிலைமை. அதன் பிறகு கோவை போகாம இங்கேயே  செட்டில் ஆகலாம்னு இருந்தேன். அப்போதுதான் மாற்று சினிமா இயக்குநர், நவீன நாடகக் கலைஞர் அருண்மொழி சிவப்பிரகாசத்தின் அறிமுகம் கிடைச்சது. அப்போது அவர் நடிப்பு வகுப்பை நடத்தி வந்தார். அவரிடம் பயிற்சி பெற சேர்ந்தேன். அந்த வகையில் தான்  5 வருடம் நடிப்புக் கலையைக் கத்துகிட்டேன். இயக்குநர் ஆவதற்கு, நடிப்பும் அவசியம் என்பதால் என்னால் எளிமையா, எல்லாத்தையும் கத்துக்க முடிஞ்சது. அந்த சமயத்துல தான் அருண்மொழி சார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் என்னுடைய புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அதன் மூலமா  வாய்ப்பு கிடைச்சதுதான் அம்மணி திரைப்படம்.அதன்பிறகு வரிசையாக வெள்ளித்திரை வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

“கல்லூரிக் காலத்தில் நீங்க விழிப்புணர்வு நாடகங்களில் நடிச்சி இருக்கீங்க. அது குறித்து?”

 “கல்லூரிக் காலத்தில்  எக்கோ கிளப் என்ற அமைப்பில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தெரு நாடகங்களில்  நடிச்சி இருக்கேன். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சுற்றுலா இடங்களில் இந்த நாடகங்களை நடத்துவோம். இந்த தெரு நாடகங்கள் சமூகத்தில் நிறைய விழிப்புணர்வையும் நேர்மறையான மாற்றத்தையும் கொண்டுவருவதற்கும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மாற்றுவதற்கும் கருவியாக இருந்தது. இது திரைப்படத்துறைக்கு வந்த பிறகும் அருண்மொழி சாருடன் இணைந்து   உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நாடகங்களில் நடிச்சேன். “

“நடிப்பும், இயக்கமும் இப்படியான  நாடகங்களில் நடிச்சதில் இருந்தே தொடங்கியது என்று கூறலாமா?”

“நாலு வயசுல இருந்தே நடிக்கணும்னு ஆசை இருந்தது. அப்பவே டான்ஸ் ஆடும்போது எக்ஸ்பிரஷனோடு டான்ஸ் பன்றது ரொம்ப பிடிக்கும். வீட்டுக்குப் பக்கத்துல எதாவது போட்டி வச்சாங்கன்னா முதல் ஆளா போய் கலந்துக்குவேன். அதன்பிறகு டிவியைப் பார்த்தும்  கத்துக்கிட்டேன். இதுக்குனு கிளாஸ் எதுவும் போகல. அதன்பிறகு இயக்குநரா ஆகணும்னு ஆசை வந்தப்போ அது தொடர்பாக இருக்கிற  எல்லாமே பிடிச்சதா தெரிஞ்சது. நடிப்பு, கொரியாகிராஃபிக்னு  எல்லாத்திலும்  கவனம் செலுத்தினேன். அந்த அடிப்படையிலதான் நடிப்பு. சினிமாவுல நடிப்புக்காகனு நான் வாய்ப்பு எதுவும் தேடல. எல்லாமே என்னுடைய முகம் கதாபாத்திரத்துக்கு ஏற்றது என்பதால அமைஞ்சதுதான்.”

 “உங்களுடைய படங்கள் எல்லாமே வித்தியாசமா இருக்கு. கதாபாத்திரமும் அழுத்தமா இருக்கே? இப்படியான படங்கள் தான் நடிக்கணும்னு எதாவது முடிவு பண்ணி இருக்கீங்களா?”

” நடிப்பை பொறுத்தவரை இது தான் நடிக்கணும் இது நடிக்கக்கூடாதுனு நான் யோசிக்கறது இல்ல. எங்கிட்ட வர இயக்குநர்கள் எல்லாமே இவங்க இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்க.சரியா நடிப்பாங்க என்ற நம்பிக்கையில வராங்க. அப்படித்தான் எல்லா படங்களுமே அமையுது. காமெடி  மற்றும் ரொமான்ஸ் ரோல் எல்லாம் பண்ணணும்னு ஆசை இருக்கு. இதுவரை நான் அதைப் பண்ணல. அப்படி அமைஞ்சா அதையும் சிறப்பா பண்ணுவேன்.”

“‘ம்ம்ம்’ மற்றும் மாடத்தி’ திரைப்படங்கள் கொடுத்த அனுபவத்தை சொல்லுங்க?”

நான் கதாநாயகியா நடிச்ச ‘ம்ம்ம்’ படம், ஆஸ்கர் வரைக்கும் போயிருக்கு. கேரளாவைச் சேர்ந்த விஜேஷ் மணி இயக்கியிருக்கார். குரும்பர் மொழியில் ஒரு சினிமா வெளியானது முதல்முறை. தேன் சேகரிக்கிற  கணவருக்குத் துணையா இருக்கிற மனைவியா இதில் வர்றேன். நம் அத்தனை பேருக்குமான உணவுச்சங்கிலியும் பரிமாற்றமும் தேனீக்கள் மூலமே நடக்குதுங்கிறது ஆச்சர்யமான உண்மை. காட்டில் தேன் இருப்பதற்கான ஆதாரங்கள் அழிக்கப்படுது. ஊடுருவுற செல்போன் கோபுரங்கள், தேனீக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குது. இந்தப் படத்துல இணை இயக்குநராகவும் பணியாற்றினேன். இந்தப் படம் பத்து நாளில் எடுத்து முடிக்கப்பட்ட   படம். ஓய்வே இல்லாம  சாப்பிடக்கூட  நேரமில்லாம இரவு பகல்னு நாங்க வேலை செய்தோம். அதனால நிறைய அனுபவங்கள கொடுத்துச்சு. இந்த படம் ஆஸ்கார்ல  திரையிடப்பட்டது மிகப் பெரிய விஷயம்.

 அதேபோன்றுதான்  2017இல்  எடுத்த மாடத்தியும் சிறப்புக்குரியது. இந்த படமும் என் போட்டோவை அருண்மொழி சார் பேஸ்புக்ல போட்டதால கிடைச்சதுதான். இந்தப் படத்தின் கதை அழுத்தமானது தான். இதில் சாதி மட்டுமில்லாம பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைப் பேசுகிற படம் இது. எனக்கு நடந்த  மாதிரி, என் பொண்ணுக்கு நடந்து விடக் கூடாதுனு திட்டிக்கிட்டு பயத்தோடு இருக்கிற அம்மா. அதையொட்டிப்  பயணிக்கிற படம். இந்தப் படத்தை என்னால், நல்லா புரிஞ்சிக்க முடிஞ்சது. அதுக்குக் காரணம் நாம எல்லாருமே ஏதோ ஒரு வகையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறோம் தானே. அது அதிகமா நடந்து அதை  எதிர்க்கக் கூட முடியாத நிலையில, இருக்காங்க என்பதை நல்லா புரிஞ்சிக்க முடிஞ்சது. இந்தப் படத்துக்காக அந்த மக்கள் கூடவே இருந்து அவங்களுடைய வட்டார வழக்கு மொழியைக் கத்துக்கிட்டு நடிச்சோம். அந்தப் படமும் நல்ல அனுபவங்கள கொடுத்துச்சி. படத்தைப் பார்த்தவங்களும் ரொம்ப யதார்த்தமா இருந்துச்சினு சொன்னாங்க.அதனால மாடத்தியும்  மறக்க முடியாத  படம்தான்.”

“உங்களுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல் நடந்திருக்கா?”

 “எனக்குனு இல்ல.. எல்லாருக்குமே ஏதோ ஒருவகையில் நடந்திருக்கும். எனக்குப் பேருந்துல நடந்துச்சி. பாலியல் சீண்டல்கள் எப்படியான பயத்தையும்,பதற்றத்தையும் கொடுக்கும் என்பது  நமக்கு எல்லாருக்குமே  தெரியும். அதுவே அதிகமா நடந்து அதோடு சாதிய ரீதியாக  ஒதுக்கப்படுகிறோம் என்கிறபோது அது வலியானது. அதை ஒரு பெண்ணா இருந்து என்னால ஈசியா அந்தக் கதாபாத்திரத்தோடு கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.

 எனக்கு ஒரு பெண்குழந்தை இருக்கா. எனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் என் மகளுக்கு நடக்கக் கூடாதுன்னு  நெனப்பேன். அப்படித்தான்  பெண்பிள்ளைகள் பெற்ற எல்லா அம்மாக்களும் நெனப்பாங்க. அதனால இந்தப் படத்துல  இயல்பாவே நடிக்க முடிஞ்சது என்பதைவிட வாழ முடிஞ்சதுன்னு சொல்லலாம்”

 “ஒவ்வொரு திரைப்படத்திலேயும் அந்த கேரக்டராவே வாழறீங்களே, அது எவ்வாறு?”

 “சின்ன வயசுலே இருந்தே மத்தவங்க பேசற மாதிரி பேசிக் காட்டுவேன். நடிச்சிக் காட்டுவேன். அது எனக்கு இயல்பாவே வரும். அப்படிப் பள்ளியிலேயே எல்லா ஆசிரியர்கள்  மாதிரி பேசிக் காட்டுவேன்.  ஏதாவது நாவல் படிச்சாகூட அதில் வருகிற வட்டார மொழிகளை  ஒரு வாரத்துக்குப் பேசிட்டே இருப்பேன்.அதனால் இயற்கையாவே அப்படியே உள்வாங்கிக்கற அறிவு எனக்குள்ள இருக்கு. அதனால் நடிப்புன்னு வரும்போது பெரிய அளவில் எனக்கு சிரமம் இல்லை.”  

 “திரைப்படத்துறைக்கு ஒரு பெண் வருவது சாதாரண விஷயமல்ல.. குடும்பம்,சமூகம்னு பல தடைகளைக் கடந்து வரணும்.அப்படி வரும்போது உங்களுக்கு எதாவது தடை இருந்துச்சா?”

“பெருசா எந்தத் தடையும் இல்லை. குடும்பத்துல முழுவதுமா எனக்கு சப்போர்ட் பண்ணாங்க.  இதைச் செய்ய வேண்டாம்னு எப்பவும் சொன்னதில்லை. எனக்குப் பிடிச்சதை பண்ணுவேன். இப்படி முடிவெடுத்திருகேன்னு வீட்டில் சொல்வேன். அப்படிச் சொல்லும் போது தடை சொன்னதில்ல. ஆனா அந்த முடிவு சரியானதா ? குழந்தைத்தனமா எதாவது தவறா எடுத்திருக்கேனான்னு யோசிப்பாங்க. கருத்து சொல்வாங்க. சொல்ற கருத்துக்குத் தெளிவா பதில் சொன்னா, அது சரியா இருந்தா, ஆதரவு கொடுப்பாங்க.சென்னைக்குத் தனியாத்தான் வந்தேன்.கையில வேலையில்லாமத்தான் வந்தேன். அதுல இயல்பாவே கஷ்டம் இருக்கும் என்பது தெரியும்.அப்படித் தெரிஞ்சி கவலபடறதுல எந்த அர்த்தமும் இல்லை. அதனால வேலை தேடினது இந்த இண்டஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சதுன்னு எல்லாத்தையும் சுவாரஸ்யமாத்தான் எடுத்துக் கிட்டேன். “

 “திரைப்படத்துறையில  வேலை தேடினப்போ எதாவது பிரச்னைகளை  சந்திச்சிங்களா?”

   “நடிப்புக்காக  வாய்ப்பு தேடினது இல்லை. எனக்கு இயக்குநரா ஆகணும் என்பதால்  நான் நடிப்புத் தேடி  சான்ஸ் கேட்டது இல்ல . இதுவரை பண்ண ரோல் எல்லாமே அந்த கதாபாத்திரத்துக்கு நான் பொருந்துவேன்  என்பதால வந்ததுதான்.  என்னுடைய நண்பர்கள் மூலமாக வந்த படங்கள் தான். அதனால பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் நான் எதிர்கொள்ளல..”

“திரைப்படத்துறைன்னாவே அழகும் வசீகரமும் தேவைன்னு  இருக்கு. ஆனா நீங்கள் அதிலிருந்து மாறுபட்டு இருக்கீங்க. அதனால எதாவது பிரச்னைகளை எதிர்கொண்டீங்களா?”

 “ஒரு படத்தில் நல்ல கதாபாத்திரங்களின் அழுத்தமான நடிப்பு தேவை என்கிறபோது, வாய்ப்புகள் என்னைத் தேடி வருகிறது. நானா தேடி போய்க் கேட்டிருந்தால் ஒருவேளை நான் கருப்பா இருக்கேன் என்று நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனா அவங்களே என்னைத் தேர்வு செய்து தேடி வரும்போது  நான் முடிவு சொல்ற இடத்துல இருப்பதால அப்படியான புறக்கணிப்புகள் இல்லை.”

“இன்னும் கலரா இருந்திருந்தா நிறைய  படங்கள் நடித்திருக்க முடியும்னு நெனச்சது உண்டா?”

“இப்படி நிறைய பேர் எங்கிட்ட கேட்டிருக்காங்க.சினிமா உலகம் கமர்ஷியல் நிறைந்தது என்பதால் இந்தத் துறையை இப்படி மாத்தி வச்சிருக்காங்க. அது எப்படி இருந்தாலும் என்னுடைய கலர் எனக்குப் பிடிக்கும். அது என்னுடைய சிறப்பு. அண்மைக் காலமா திரைத்துறை மாறியிருக்கு.நான் இதுவரை வாய்ப்புத் தேடிப் போனது இல்லை.ஆனால் நான் இப்ப வரை தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன்.காரணம், இன்றைய இயக்குநர்கள் யதார்த்தமான கதைகளுக்கு முக்கியத்துவம் தராங்க.என்னைப் போன்றவர்களின் கதாபாத்திரங்களின் நடிப்புதான் தற்போதைய தேவையா இருக்கு.‘நல்லா கலரா இருக்கிற என் பிரண்ட்ஸ் கூட, உங்களுக்கு தான் நல்ல ஸ்கிரிப்ட் கெடைக்குது. அழுத்தமான கேரக்டர்களில் நீங்கதான் நடிக்கிறீங்க.ஆனா எங்கள ஹீரோயின் தோழியா இருக்க, கவர்ச்சியா நடிக்கத்தான் அழைக்கறாங்கன்னு சொல்லி பொலம்பி இருக்காங்க. அதனால சினிமாத்துறை அண்மைக்காலமா  மாறியிருக்கு.”

“அடுத்த படங்கள் மற்றும் இலக்குகள்  பற்றி செல்லுங்க?”

“பசுபதி சாரோடு தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களுக்கான கதைகள் தயார் பண்ணியிருக்கேன். அந்தப் படத்துக்கான வேலைகள் போயிட்டிருக்கு. என்னுடைய அடுத்த இலக்கு டைரக்‌ஷன்தான்”

 “செம்மலர் அன்னம் ‘ பெயரின் சுவாரஸ்யம் என்ன?”

“தாத்தா, பெரியப்பா, அப்பான்னு எங்க குடும்பத்தினர்  அனைவரும்  கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவங்க. இயக்கத்தில் இருந்தவங்க  என்பதால் இந்தப் பெயர் எனக்கு வச்சாங்க. அது தான் சிறப்பு..”

 “பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க”

“நிறைய பெண்கள் எதையும் வெளியில் சொல்வதில்லை. எதற்கும் தயங்கி நிக்காதீங்க. எல்லோருக்குள்ளயும் ஒரு திறமை இருக்கு. இதை நீங்க தெரிஞ்சிக்கோங்க. திறமை இல்லாத விஷயத்தில் கூட முயற்சி எடுத்தால் வெற்றி பெறலாம். திறமை இருந்து அதைக் கண்டறிந்து மெருகேத்தி  விட்டா சாதிக்கலாம். குடும்பம் தான் என்று பெண்கள் தங்களைச் சுருக்கிக் கொள்ளாமல் என்ன திறமை இருக்குன்னு யோசித்து வெளியே கொண்டு வாங்க.தொடர்ந்து புதுசா கத்துக்கோங்க. அதற்கான சூழலையும் அப்படியே உருவாக்குங்க. இதுதான் பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்” என்றார் உறுதியுடன்….

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!