day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நடனத்தின் புரட்சிப் பெண் ருக்மணி தேவி அருண்டேல்

நடனத்தின் புரட்சிப் பெண் ருக்மணி தேவி அருண்டேல்

பரதநாட்டியத்தின் புரட்சி நாயகி ருக்மணி தேவி அருண்டேல். தான் கற்ற கலைக்குப் பெருமை சேர்த்தவர் அவர். மாற்றம் என்பதை தன் செயல் மூலம் நிரூபித்துக் காட்டியவர் ருக்மணி தேவி.
தன் கை முத்திரைகளால் நடனத்தின் வெளியில் புரட்சி விதையை விதைத்தார் அவர். அப்புரட்சி விதை வளர்ந்து தளிர் விட்டு இந்தியாவின் கலைக்கு இலக்கணமாய் உயர்ந்து நிற்கிறது.
நம் மதுரை மண்ணின் மகள்தான் ருக்மணி தேவி. 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகண்ட சாஸ்திரி, சேஷம்மாள் தம்பதியருக்கு அருமை மகளாகப் பிறந்தவர் அவர். ருக்மணியின் தந்தை பொறியாளராக இருந்தார். அதோடு அவர் சமஸ்கிருத அறிஞர்கூட. அவருக்கு அன்னி பெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சபை மீது அதீத ஆர்வம் இருந்தது.
பழைய சம்பிரதாயங்களைப் பத்திரமாகப் பாதுகாத்துப் பின்பற்றிய பிராமணக் குடும்பத்தில் பிறந்த ருக்மணி தேவியும், அன்னி பெசன்ட் அம்மையாரின் முற்போக்கு சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டார். தன் தந்தையுடன் சென்னைக்கு வந்துவிட்டிருந்த ருக்மணிக்கு அன்னி பெசன்ட் அம்மையாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.
பெண்களின் உரிமை, பெண்கள் தாம் செய்ய விரும்புவதைச் செய்யும் துணிச்சல் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை அன்னி பெசன்ட் அம்மையாரிடமிருந்து கற்கத் தொடங்கினார் ருக்மணி தேவி. அன்னி பெசன்ட் அம்மையாரின் உதவியாளரும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரம்மஞானியுமான ஜி.எஸ்.அருண்டேலை 1920 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ருக்மணி. ஜி.எஸ். அருண்டேல் சிறந்த கல்வியாளர். இந்தத் திருமணம் அந்தக் காலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. புரட்சிக்கு வித்திட்ட ருக்மணிக்கு தன் பாதையைத் தானே தீர்மானிக்கும் திறன் இருந்தது.
1928ல் மும்பையில் ருக்மணி தேவியும் அருண்டேலும் புகழ்பெற்ற ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவின் நடனத்தைப் பார்த்தனர். அதில் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பாவ்லோவாவோடு ஒரே கப்பலில் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். ருக்மணி தேவி பாவ்ேலாவின் பாலே நடனத்தால் ஈர்க்கப்பட்டார். மேலும் பாவ்லோவின் நாட்டியக் குழுவில் இணைந்து பாலே நடனத்தை திறம்படக் கற்றார்.
அப்போதுதான் ருக்மணி தேவியின் நடன ஆர்வம் பரதத்தின் மீது திரும்பியது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டங்களில் நாம் ‘பரதநாட்டியம்’ என்று அழைக்கும் நடனம் ‘சதிராட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மேலும் இக்கலையை ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் மட்டுமே பயின்றனர். சாமானியப் பெண்களோ, இக்கலையின் மீது ஆர்வம் கொண்ட பெண்களோ பரதத்தை பயில்வதும் ஆடுவதையும் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையிலும், அவர் பரதத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்ற ஆசிரியரிடம் பரதம் பயின்றார் ருக்மணி தேவி. தான் மிகவும் ரகசியமாகப் பரதத்தைக் கற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய நாட்டிய ஆர்வத்திற்கு கணவரைத் தவிர மற்ற அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அவரே பின்னாளில் தெரிவித்துள்ளார்.
1935 இல் அடையாறு ஆலமரத்தின் கீழ் பிரம்மஞான சபையின் வைர விழாவின்போது ருக்மணி தேவி அருண்டேலின் அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. அந்த அரங்கேற்றத்திற்குப் பிறகு பரதத்தின் மீது மக்களின் பார்வை மாறத் தொடங்கியது. அக்காலத்தில் ஆபாசக் கலையாக கருதப்பட்ட பரதம் ஆண்டவனின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஊடகமாக மாற அடிக்கல் நாட்டப்பட்டது அந்நாளில்தான்.
சமூகத்தை மாற்றும் எண்ணத்தோடும், பலரும் பரதத்தில் அடியெடுத்து வைக்கவும் 1936 இல் சென்னை கலாக்ஷேத்ராவைத் தொடங்கினார் ருக்மணி தேவி. கற்கவும் கற்பிக்கவுமாக தொடங்கப்பட்ட கலாஷேத்ரா அடையாறு பிரம்ம ஞான சபையில் உள்ள ஆலமரத்தின்கீழ் ஒரே ஒரு மாணவருடன் தொடங்கப்பட்டது. அந்த ஒரு மாணவி பிற்காலத்தில் கலாக்ஷேத்ராவின் தலைவராகப் பணியாற்றிய ராதா பர்னியர் ஆவார்.
கலையின் ஊற்றுத்தலமாக விளங்கிய கலாஷேத்ரா உருவாக்கிய கலை ரத்தினங்கள் ஏராளம். யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஒடிசி நாட்டிய தாரகை சஞ்சுக்தா பாணிக்கிரகி என இங்கு நடனத்தைக் கற்றவர்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
தன் கலை தாகத்தை நிறைவேற்றும் விதமாக தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார் ருக்மணி தேவி அருண்டேல்.
விலங்குகளின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக விலங்கு நலனுக்காகப் பல சேவைகளைச் செய்தார் ருக்மணி தேவி. நம் நாட்டின் வனவிலங்கு பாதுகாப்புத் துறை தலைவராகச் செயல்பட்ட ருக்மணி தேவி மாநிலங்களவை உறுப் பினராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்ட முன்வரைவு தாக்கல் செய்ய காரணமாக இருந்தார். ’நான் விலங்குகளின் தோழி. என் நண்பர்களை எப்போதும் நான் சாப்பிடுவதில்லை’ என அழகாகக் கூறும் ருக்மணி தேவி அருண்டேலின் சேவையைப் பாராட்டி விக்டோரியா மகாராணியின் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
பல நாடுகளுக்கு ருக்மணி தேவி பயணம் செய்தார். பல உலக அமைப்புகளிலும் அவர் இடம் பெற்றிருந்தார். பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் அவர்.
1977 ஆம் ஆண்டு அந்நாளைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். அப்பொழுது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ருக்மணி தேவி அருண்டேலை குடியரசுத் தலைவராகப் பதவியேற்க வலியுறுத்தினார். ஆனால் ருக்மணி தேவி அருண்டேல் நாட்டியத்தின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக பதவியேற்க மறுத்துவிட்டார். பரதக் கலையை உயிராய் நேசித்தவர் ருக்மணி தேவி. இயல்பிலேயே புரட்சிகர சிந்தனை கொண்டவராக அவர் இருந்ததால் பரதக் கலையைப் பிரபலம் ஆக்கினார். உலகம் முழுக்க பரவி நம் கலை மரபைப் பறைசாற்றுகிறது பரதநாட்டியம். 1986ஆம் ஆண்டு பிப்ரவரியில் ருக்மணி தேவி அருண்டேல் மறைந்தார். அவர் மறைந்தாலும் பரதத்தின் ஒவ்வொரு அசைவிலும் அவருடைய பங்களிப்பு மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.

– ருக்மணி தேவி அருண்டெல்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!