day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழால் வென்றவர்

தமிழால் வென்றவர்

இன்றைய தலைமுறையில் பலருக்கும் தமிழில் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் தெரியாது. ஆனால், தமிழில் பேசுவதை மட்டும் தகுதிக்குறைவாக நினைப்பார்கள். இவர்கள் மத்தியில் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்று வழிகாட்டுகிறார் முனைவர் மரிய தெரசா. தமிழையே தன் மூச்சாகக் கொண்டவர் இவர். தான் எழுதிய புத்தகங்களைவிட அதிகமான விருதுகளைப் பெற்றிருக்கும் தமிழ்ச் செம்மல். ‘பெண்களின் குரல்’ வாசகர்களுக்காக மரிய தெரசாவைச் சந்தித்தோம்.
மரிய தெரசாவின் சொந்த ஊர் காரைக்கால். ஹிந்தியிலும் தமிழிலும் பிஎச்.டி. முடித்திருக்கிறார். ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியைாகப் பணியாற்றியிருக்கிறார். இவருடைய அம்மா கவிஞர். அவரது மறைவுக்குப் பின், அவர் புத்தகத்தை வெளியிட்டோம். என் சகோதரனும் இரண்டு, மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் என் அம்மாவழி தாத்தா பிரெஞ்சு மொழியில் கவிதை எழுதியிருப்பதாகச் சிறுவயதில் என்னுடைய உறவினர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். இப்படிக் குடும்பபே எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் இவருக்கும் எழுத்தின் மீது ஆர்வம் வந்தது.
தாய்மொழியாம் தமிழைக் கொண்டாடும் இவர், தன் முதல் கவிதையை ஹிந்தியில்தான் எழுதினார்!
“ஹிந்தியில் பி.ஏ., படிக்கும்போது வகுப்பறையில் ஒவ்வொருவரும் அவரவர் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். சிலர் நடனம் ஆடினார்கள், சிலர் பாடினார்கள். ஆனால், நான் கவிதை எழுத முடிவெடுத்தேன். முதன் முதலில் ஹிந்தியில் கவிதை எழுதி வெளியிட்டதும் அப்போதுதான். அதன்பின் ஹிந்தியில் நிறைய கவிதைகளை எழுதியுள்ளேன். அப்போது எனக்கு ஒரு சின்ன மன உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. நான் தமிழ்ப்பெண், நான் ஏன் தமிழில் எழுதக் கூடாது என்று எண்ணினேன். அதுதான் என்னை இத்தனை நூல்களை எழுதவைத்தது” என்று புன்னகைக்கிறார் மரிய தெரசா.
மாற்றத்தை ஏற்படுத்தாத எழுத்தால் எந்தப் பலனும் இல்லை. மரிய தெரசாவின் கவிதைகள் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இவரது கவிதைகள் எல்லாம் பெண்ணியம், சுற்றுச்சூழல், குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் என்று சமூக நலன் சார்ந்தவையாகவே இருக்கின்றன. மக்கள் இதை வரவேற்கிறார்கள் என்கிறார் அவர்.
“சமீபத்தில் சுற்றுச்சூழலைப்பற்றி ஒரு நூல் வெளியிட்டுள்ளேன். அதை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், ஒரு மாணவி சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வுக்காக அந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதேபோல் ‘குடிமகனுக்கு ஒரு கடிதம்’ என்ற எனது புத்தகத்தைப் படித்துவிட்டு சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுத் திருந்தியிருக்கின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் என் மாணவியின் தந்தையே குடியை நிறுத்தியுள்ளார். தனது தந்தை குடிப் பழக்கத்தை விட்டுவிட்டதையும், இப்போதுதான் தனது அம்மாவின் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதாகவும் அந்த மாணவி சொன்னபோது, என் எழுத்துக்கு உண்மையான பலன் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தேன். முதியோர் இல்லம் குறித்து நான் எழுதிய கவிதையைப் படித்துவிட்டு ஒருவர் தன் அம்மாவை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். இதைவிட என் படைப்புக்கு வேறு உயர்ந்த விருது இல்லை” என்று நிதர்சனத்தைச் சொல்கிறார்.
குழந்தைகளுக்காக 32 புத்தகங்களை எழுதியிருக்கும் இவர், குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவர்களின் பெற்றோர்களின் கையில்தான் உள்ளது என்கிறார்.
“நான் எழுதிய புத்தகங்களில் குழந்தை களுக்குப் பிடித்த காடுகள், விலங்குகளின் படம், அவற்றைப் பற்றிய கதைகள் நிறைய இருக்கும். இதைப் படிக்க படிக்க அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். இதுபோன்ற நிறைய புத்தகங்களைப் படிக்க நினைப்பார்கள். ஆனால், இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதை எதையோ வாங்கிக்கொடுக்கிறார்கள். அதற்குப் பதில் இதுபோன்ற புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தலாம்” என்று ஆலோசனை சொல்கிறார் மரிய தெரசா.
கல்வி என்பது ஒரு பெண்ணுக்கு மிக மிக அவசியம் என்று சொல்லும் இவர், கல்வி அறிவு இல்லாததால்தான் பெண் அடிமைப்பட்டுக் கிடக்கிறாள் என்கிறார். “கல்வி அறிவு இல்லாததால்தான் ஒரு பெண், ஆணைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கல்வி அறிவு இருந்தால் யாருடைய தயவும் தேவையில்லை. யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பெண்கள் யாரும் ஒரு கையில் கரண்டியும், இன்னொரு கையில் தோசைக்கல்லையும் பிடித்துக்கொண்டு பிறப்பதில்லை. சமையல் செய்வதே பெண்களின் வேலை என்று நினைக்கக் கூடாது. நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாசிக்க, வாசிக்க உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.
முதலில் பெண்களுக்கு வீடுகளில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி நாம் வெற்றிபெற்றால் அல்லது வெளி உலகம் நம்மை அங்கீகரித்தால் வீடுகளிலும் அங்கீகரித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்துவிடுவார்கள். நம்முடைய படைப்புக்கு வெளியில் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்போதுதான் அந்தக் குடும்பத்தார் தாங்கள் செய்த தவறை உணர்வார்கள். முதன் முதலில் நாம் எழுதும்போது யாரும் நம்மை அங்கீகரிக்க மாட்டார்கள். உதாசீனப்படுத்துவார்கள். அதையெல்லாம் நாம் காதில் வாங்கிக்கொள்ளக் கூடாது. நாம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்” என்று சொல்லும் மரிய தெரசா, தமிழுடன் நாம் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது நல்லது என்கிறார்.
“குறைந்தது மூன்று மொழிகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று என் மாணவர்களுக்குச் சொல்வேன். பாரதியார் பல மொழிகளைக் கற்றுவைத்திருந்ததால்தான் யாமறிந்த மொழிகளிலேயே சிறந்தது தமிழ் என்று சொன்னார். ஆனால், இன்றைய தலைமுறையினர் மொழிக்கென்று தனிக்கவனம் செலுத்திப் படிப்பதில்லை. மொழி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. தமிழில் படித்தால்தான் வேலை என்று சொன்னால் எல்லோரும் தமிழைத்தான் நாடுவார்கள். வாழ்க்கை என்னும் ஓட்டத்தை ஓட்டுவதற்கே இன்றைய தலைமுறையினர் படிக்கிறார்கள். எதைப் படித்தால் வேலை கிடைக்கும், அதிக வருமானம் கிடைக்கும் என்றுதான் யோசிக்கிறார்கள். அவர்கள் நினைப்பதுபோல் இலக்கியம் என்பது பயன்பாடு கிடையாது, இன்பத்தைக் கொடுப்பது. ஒரு கவிதையைப் படித்து முடித்ததும் அடடா… என்று ரசிக்கிறோமே, அதுதான் இலக்கியம் நமக்குத் தரும் இன்பம். இலக்கிய அழகை ரசிக்கும்போது அங்கு தீவினை வராது. கெட்ட எண்ணங்கள் வராது. அதனால்தான் நான் இயற்கையை அதிகமாகப் போற்றுகிறேன். என்னை இயற்கையின் காதலி என்றுகூடச் சொல்லலாம்” என்று சொல்லும் மரிய தெரசா இன்று என்னதான் டிஜிட்டல் புத்தகங்கள் வந்தாலும் நூல் வடிவில் இருப்பதுதான் காலத்துக்கும் சிறந்தது என்கிறார்.
ஒரு வரி, இரு வரி, மூன்று வரிகள் என்று கவிதைகளில் பல்வேறு புதுப்புது முயற்சிகளைச் செயல்படுத்தியிருக்கிறார் இவர். கல்வி மட்டுமே பெண்களைக் கரைசேர்க்கும் என்கிறார். “கல்வி அறிவுதான் பெண்ணுக்குக் காலா காலத்துக்கும் கைகொடுக்கும். கல்வி அறிவு இருந்தால் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் நம்மை விட்டுப் போகாது” என்று முடித்தார் முனைவர் மரிய தெரசா. அவர் சொன்ன வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை என்பதற்கு அவரே சாட்சி!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!