day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

‘சும்மா’இருந்தாலும் சலுகை! – லதா ரகுநாதன்

‘சும்மா’இருந்தாலும் சலுகை! – லதா ரகுநாதன்


வேலைக்குச் சென்று பணம் கொண்டுவந்தால் மட்டும்தான் ஒரு பெண் வேலை செய்கிறாள் என்று கூறுவது சரியா? நிச்சயமாக இல்லை. குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஆசிரியை, சமையல் செய்யும்போது  செஃப், வீட்டுப் பராமரிப்பில் உள் அலங்கார வடிவமைப்பாளர், முதியோர்களைப் பார்த்துக்கொள்வதில் செவிலி, கணவனிடம் அன்பு செலுத்துவதில் தாய் இப்படி இந்த வெறுமனேஇருக்கும் பெண் செய்யும் வேலைகளைக் கணக்கிட முடியாது. ஆனால், இவை பல நேரங்களில் மற்றவரால் உணரப்படுவதில்லை. காரணம், இதற்கான ஊதியம் அவளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதைப் பற்றிய கேள்வி முதன் முதலில் 1972ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது தேசிய மகளிர் விடுதலை மாநாட்டில் எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.

நம் நாட்டிற்கு வருவோம். 2010ஆம் நேஷனல் ஹவுஸ் வைஃப்ஸ் கூட்டமைப்பு எனும் பெண்களுக்கான சங்கம், தங்களை ஒரு தொழிற்சங்கமாகப் பதிவு செய்வதற்கு அனுமதி வேண்டியது. ஆனால், சார்பதிவாளர் அதை நிராகரித்துத் தீர்ப்பளித்தார். தொடர்ச்சியாக 2012ஆம் ஆண்டு அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணா திரத், அரசாங்கம் கணவர்கள் தங்கள் மனைவிகளுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதைச் சட்டமாக அறிவிக்கப்போவதாகக் கூறினார். ஆனால் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தால், இந்தக் கருத்து அரசாணையாகப் பிறப்பிக்கப்படாமல் போயிற்று.

இன்று இந்தச் சிந்தனையை பலர் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உண்மைதான். இதை நடைமுறை செய்வதில் நிறையவே சிக்கல்கள் உண்டு. ஆனால், ஒன்றை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலை வருடா வருடம் கணக்கிடப்படுகிறது. இதில் பெண்கள் வீட்டில் செய்யும் பணிகளுக்கு எந்த மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இதனை மாற்றி அமைக்கவும் அதாவது மறைமுக வேலைவாய்ப்புகளின் மதிப்பும் சேர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை சொன்னது நாட்டு நடப்பு. இனி வீட்டு நடப்பிற்கு வருவோம். பெண்கள் அவர்கள் சொல்வது போல்வெறும்என்ற சொல்லின்படி மதிப்பு ஏதும் இல்லாமல் இல்லை. அவர்களின் பெயர்கள் இணைக்கப்படும்போது பல ஆதாயங்களை அந்த வீடு பார்க்கத் தொடங்குகிறது. ஆனால், பல நேரங்களில் இது பலருக்கும் தெரியாமல் போவதால், இந்தச் சலுகைகளை அவர்கள் அனுபவிக்காமல் போய்விடுகிறார்கள்.

பெண்களுக்கான சலுகைகள் எவை, அது எவ்வாறு கிடைக்கும், அது எப்போது கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

பத்திரப்பதிவு கட்டணங்கள்

நாம் சொத்து வாங்கும்போது சொத்தை மாற்றுவதற்கான பத்திரங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அதற்குக் கட்டணம் அதாவது முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை நம் சொத்தின் மதிப்பில் ஒரு சதவீதமாக இருக்கும். இந்தச் சதவீதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அதேபோல் இந்தச் சதவீதத்தில் பெண்களுக்கென தனிச் சலுகைகளும் கொடுக்கப்படும். உதாரணம், புதுடெல்லியில் ஆண்கள் பெயரில் செய்யப்படும் பத்திரப்பதிவிற்கு 6 சதவீதம். ஆனால், பெண்கள் பெயரில் செய்யப்படுபவற்றுக்கு வெறும் 4 சதவீதம். இந்தச் சலுகை கொடுக்கப்படுவதும்  மாநிலங்களுக்குள் வேறுபடும். இந்தச் சலுகையைப் பெறுவதற்குச் சொத்து பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். கொஞ்சம் கணக்கிட்டுப் பார்ப்போம். இரண்டு கோடி ரூபாய் சொத்துப் பதிவு செய்யும்போது கிடைக்கக்கூடிய சலுகை 4 லட்சம் ரூபாய். ஆக, இந்த சும்மாத்தான் இருக்கும் பெண்கள் தங்கள் பெயரைக் கொடுப்பதன் மூலம் வீட்டிற்கு நான்கு லட்சம் செலவைக் குறைத்திருக்கிறார்கள். இனி சொத்துக்கள் வாங்கும்போது பெண்களுக்கான சலுகைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு பின் முடிவெடுங்கள்.

சொத்து வரிச் சலுகைகள்

இதற்கு அடுத்த கட்டமாக, வாங்கப்பட்ட சொத்தின்மீது வருடா வருடம் சொத்து வரி செலுத்த வேண்டும். இங்கேயும் சில மாநிலங்களில் பெண்கள்மீது வாங்கப்பட்ட சொத்தின்மீது போடப்படும் வரி விகிதம் குறைக்கப்படுகிறதுஇது சில நேரங்களில் ஒரே மாநிலத்திலுள்ள பல்வேறு நகராட்சி நிறுவனங்களுக்குள் மாறுபடுகிறது. வரி செலுத்தப்படும் நகராட்சியில் இந்தச் சலுகையைப் பற்றிக் கேட்டுத்தெரிந்து செயல் படுத்துங்கள்.

வங்கிக் கடன்கள்

பல நேரங்களில் நாம் வீடு அல்லது ப்ளாட் போன்ற சொத்தை வாங்கும் போது, அதற்குத் தேவைப்படும் தொகையை வங்கிகளில் கடனாக எடுப்போம். இவ்வாறு எடுக்கப்படும் கடன்களுக்கு மாத வட்டி செலுத்த வேண்டும். பல வங்கிகளில் சொத்து பெண்கள் பெயரில் வாங்கப்படும்போது கடனும் அவர்கள் பெயரிலேயே கொடுக்கப்படும். இவ்வாறான கடன்களுக்கான வட்டி விகிதத்தில் சலுகைகள் உண்டு. உதாரணம், பாரத ஸ்டேட் வங்கி பெண்களுக்குக் கொடுக்கப்படும் வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதத்தில் .05% முதல் 1.00% வரை வட்டிக் குறைப்பு கொடுக்கிறது. கொஞ்சம் கணக்கிட்டுப் பார்த்தால் இருபது வருடம் செலுத்தப்போகும் தவணை தொகையில், இந்த வட்டிக்குறைப்பு ஒரு கணிசமான தொகையாக இருக்கும். ஆகவே, பெண்களின் பெயரில் அல்லது பெண்களைக் கூட்டு உரிமையாளராக இணைத்து சொத்துப் பதிவு செய்ய வேண்டும். வங்கிகளிடம் வட்டி விகிதத்தில் கொடுக்கப்படும் சலுகையைப்பற்றி முன்னதாகத் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

பிரதான் மந்திரி ஆவாஸ்

யோஜனா (PMAY) திட்டம்

 அரசாங்கத்தின்அனைவருக்கும் ஒரு வீடு’  என்ற திட்டத்தின்கீழ் இந்த PMAY சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் கீழ் கொடுக்கப்படும் கடன் மானியம் சொத்து பெண்கள் பெயரில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து வாங்கப்படும் வீட்டுக்கடன்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்தக் கடன் மானியம் 3% முதல் 6.5% கடன் வட்டி விகிதத்தில் குறைக்கப்படுகிறது. பல வருடங்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன்கள் மீது இந்த வட்டிக் குறைப்பு ஒரு பெரும் நிவாரணமாக இருக்கும். இங்கும் இந்தச் சலுகை பெண்களால் மட்டுமே கிடைக்கிறது

வங்கிகளில் வைப்பு நிதிகள்

பல நேரங்களில் நாம் பாதுகாப்பு கருதி நம் சேமிப்பில் பெரும் பங்கை வங்கி களில் வைப்பு நிதிகளாகச் சேமிக்கிறோம். இங்கும் பெண்களுக்கென தனிச் சலுகை உண்டு. பெண்கள் பெயரில் திறக்கப்படும் வைப்புக் கணக்குகளுக்குக் கொடுக்கப்படும் வட்டி 0.5 முதல் 1% வரை அதிகரிக்கும். இதுவும் வங்கிக்கு வங்கி மாறுபடுவதால் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இங்கும் சேமிப்பைப் பெண்கள் பெயரில் வைக்கும்போதே அவள் வீட்டிற்கான சேமிப்புத் தொகையை அதிகரிக்கச்செய்கிறாள்.

வங்கிகளில் சேமிப்புக் கணக்குகள்

பல வங்கிகள் பெண்களுக்கான தனிப்பட்ட சேமிப்புக் கணக்குகளை ஊக்குவிக்கின்றன. இந்தக் கணக்கின் மூலம் இவர்கள் உபயோகிக்கும் டெபிட் அட்டைகளின்மீது தள்ளுபடிகளும் பணம் திரும்பப்பெறும் சலுகையும் இருக்கிறது. அதே போல் இந்த கார்டுகளின் மூலம் இவர்கள் பல மருத்துவத் தேவைகளுக்குப் பணம் செலுத்தும்போது, அவற்றில் கணிசமான தள்ளுபடி கிடைக்கிறது.உங்கள் வங்கிகளில் இவற்றைப்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டு மளிகைப்பொருட்களை இந்த அட்டைகளின் மூலம் வாங்கும்போது உங்கள் மாதச் செலவில் ஒரு கணிசமான சேமிப்பு இருக்கக்கூடும்.

ரயில் பயணங்கள்

ரயில் பயணங்களில் நாம் சீட்டு முன்பதிவு செய்யும்போது அதில் பெண்களுக்கான சலுகைகளைத் தனியே கவனித்துப் பெற வேண்டும்மூத்த குடிமகனுக்கான வயது ஆண்களுக்கு 60. ஆனால், பெண்களுக்கு 58. தவிர ஆண்களுக்கான சலுகை கட்டணத்தில் 40% தள்ளுபடி. ஆனால், பெண்களுக்கு 50% தள்ளுபடி. ஆக, வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் ஒரு பெண் பல விதங்களில் வருமானத்தை அதிகரிக்கச் செய்கிறாள்.

 

…………

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!