day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கொரோனா தடுப்பூசி சர்ச்சையும் உண்மையும்

கொரோனா தடுப்பூசி சர்ச்சையும் உண்மையும்

கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி வராதா என்று காத்திருந்த மக்களுக்கு, நடிகர் விவேக்கின் மரணம் தடுப்பூசி குறித்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரவலாக விவாதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகும்கூடச் சிலர் மீண்டும் தொற்றுக்கு ஆளாவதும் தடுப்பூசி குறித்த நம்பிக்கையின்மையை மக்களிடையே ஏற்படுத்தியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஏன் என்பதைப் பார்ப்போம்.
ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட ஆரம்பித்தார்கள். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தத் தடுப்பூசிகளை இரண்டு தவணையாகப் போட வேண்டும். முதல் தவணை முடிந்ததும் கோவிஷீல்டு தடுப்பூசியை எட்டு வாரங்கள் கழித்தும் கோவாக்சினை 28 நாட்கள் கழித்தும் அடுத்த தவணை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள் முன் பின் ஆனாலும் பரவாயில்லை. ஆனால், அந்த வாரத்துக்குள்ளேயே போட வேண்டும்.
தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசியை 10 கோடி இறக்குமதி செய்யவிருக்கிறார்கள். அதன்பின்னர் இந்தியாவிலேயே ஐந்து நிறுவனங்கள் மூலம் ஒரு வருடத்திலேயே 85 கோடி ஸ்புட்னிக் மருந்துகளைத் தயாரிக்கப்போகிறார்கள். இந்த ஊசியை முதல் தவணை முடிந்து 21 நாட்கள் கழித்து இரண்டாம் ஊசி போட்டுக்கொள்ளலாம். இவை தவிர வேறு சில தடுப்பூசிகளும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை இங்கே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசு சொல்லியிருக்கிறது. தவிர இந்தியாவிலேயே மூக்கில் போடுகின்ற மாதிரியான தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.
யாரெல்லாம் தடுப்பூசி போடக் கூடாது?
இதய நோயாளிகள், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், குறிப்பிட்ட மருந்தை எடுத்துக்கொண்டு இருக்கிறவர்கள், ஒவ்வாமை இருக்கிறவர்கள் ஆகியோர் தடுப்பூசி போட வேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு, இதய நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற 20 வகையான இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதால் முதல் கட்டமாக அவர்களுக்குத் தடுப்பூசி போட அரசு அறிவுறுத்தியுள்ளது. பிறகு இது போன்ற இணைநோயோ, கூட்டு இணைநோயோ கொண்ட 45 வயது முதல் 60 வரையுள்ளவர்களும் கட்டாயமாகத் தடுப்பூசி போட வேண்டும். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் இறப்பதற்கான சாத்தியம் அதிகம் என்பதால்தான் தடுப்பூசியில் இவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இதை மக்கள் மத்தியில் அரசு சரியான முறையில் எடுத்துச்செல்லவில்லை. அதனால்தான் மக்கள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகிறார்கள்.
தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
போலியோ, பிசிஜி, மம்ஸ், டிப்திரியா என்று ஏராளமான தடுப்பூசிகளை நாம் பயன்படுத்திவருகிறோம். லட்சக்கணக்கானவர்கள் பெரியம்மையால் பாதிக்கப்பட்டு இறந்தபோது தடுப்பூசி போடப்பட்டு பெரியம்மை என்கிற நோயே இல்லாமல் உலகத்தை விட்டே விரட்டி அடித்தார்கள். போலியோவையும் தடுப்பூசி மூலம் ஒழித்தாகிவிட்டது. தடுப்பூசி மட்டுமல்ல, எல்லா மருந்துகளும் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று சொல்ல இயலாது. 1 சதவீதமோ 0.001 சதவீதமோ ஏதாவது பிரச்சினை இருக்கும். தடுப்பூசி எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் வராது, யாருக்கும் எந்தவிதத் தீங்கும் வராது என்று யாரும் பொய்யான தகவலைத் தரவில்லை.
கொரோனா தடுப்பூசியால் 0.002 சதவீதப் பிரச்சினை இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா வருவதைத் தவிர்க்கலாம், நோய் தீவிரம் அடைவதையும் இறப்பையும் தவிர்க்கலாம். அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களிடையே திரும்பவும் தொற்று ஏற்பட்டுள்ளது. அப்படித் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 0.0009 சதவீதம்தான். தடுப்பூசி எடுத்துக்கொண்டர்களுக்கு தீவிரத் தொற்று குறைவாகவும், இறப்பும் குறைந்து காணப்படுவது நிரூபணம் ஆகியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டதால், கொரோனா தடுப்பு சாதனமான மாஸ்க், சானிடைசர்ஸ் போன்றவற்றை விட்டுவிடலாம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள். அடுத்ததாக இங்கிலாந்து. இங்கு கொரோனா தொற்று அதிகமாகக் காணப்பட்டதால் தடுப்பூசிகள் அதிகமாகப் போடப்பட்டன. அதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதேபோல் நோய்த்தொற்று பரவுவது கணிசமாகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இதுதான் தடுப்பூசியின் பலன். 3 லட்சத்தில் ஒருவர், 4 லட்சத்தில் ஒருவர் என்று தொற்று வரலாம். வரவே வராது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், மூன்றரை லட்சம் பேரில் ஒருவருக்கு கொரோனா வரலாம் என்றால் அதற்காக மூன்றரை லட்சம் பேரும் போடாமல் இருந்தால், அந்த மூன்றரை லட்சம் பேருக்கும் தொற்று வருவதற்கான வாய்ப்பும், இறப்பதற்கான சாத்தியமும் அதிகம். தடுப்பூசியால் மற்ற நாடுகளில் எல்லாம் நல்ல பலனை நாம் பார்க்க முடிகிறது. அதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து அஞீதிஞுணூண்ஞு ஞுதிஞுணtண் ஞூணிடூடூணிதீடிணஞ் டிட்ட்தணடித்ச்tடிணிண (அஉஊஐ) எனப்படும் உலகளாவிய அளவில் பதிவு செய்யப்படுகிறது. கொரோனா தடுப்பூசி அவசரகாலப் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால் கட்டாயமாக எல்லா பக்க விளைவுகளும் பதிவு செய்யப்படுகின்றன. தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், அல்லது நிறம் மாறுவது, லேசான காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்றவை மிதமான பக்க விளைவுகள். மயக்கம், மூச்சுத்திணறல், தொடர் காய்ச்சல், மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு ஆவது போன்றவை தீவிர பக்க விளைவுகள். கொரோனா தடுப்பூசிக்கு இதுபோன்ற தீவிர பக்க விளைவுகள் மிக மிக குறைவு. அப்படி யாருக்காவது ஏற்பட்டால் அந்தச் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே மக்கள் கொத்து கொத்தாக இறந்தார்கள். இதேபோன்ற நிலை இங்கிலாந்திலும் இருந்தது. சுகாதாரத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும் நாடுகளிலேயே நிலைமை அப்படி இருந்தது என்றால் நம்நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகமாகி இறப்புகள் அதிகமாகக்கூடும். அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நடிகர் விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு உண்டா?
விவேக் கோவாக்சின் தடுப்பூசி போட்டிருக்கிறார். அவருக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இணை நோய்களாக சில வருடங்களாக இருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியில் சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு மூன்றரை லட்சத்தில் ஒருவர், அல்லது 6 லட்சத்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வரலாம் என்று சொல்லப்படுகிறது. மூளைக்குப் போகிற நரம்பில் ரத்தக்கட்டு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது எல்லாம் ரொம்பவும் அரிது. கோவாக்சின் தடுப்பூசியில் அப்படி எந்தப் பக்க விளைவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை. இதயத்தின் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. விவேக்கின் மரணம் மட்டுமல்ல, யாருடைய மரணமாக இருந்தாலும் சரி அரசு சார்பில் ஒரு கைடுலைன் வைத்திருப்பார்கள். தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பதிவுசெய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற ஆய்வுகளை அரசு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
தடுப்பூசி போட மக்கள் ஏன் தயங்குகிறார்கள்?
பொதுவாக பலகட்ட பரிசோதனைகளை முடித்துத்தான் தடுப்பூசியை மக்கள் பயன்பாட் டுக்கு அளிப்பார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசி போதுமான பரிசோதனைகள் இல்லாமலேயே அவசர காலப் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டது. மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கிறது என்றால் அது எந்தவிதமான பரிசோதனை என்பது குறித்துப் போதுமான விளக்கம் அளிக்காததால் மக்களிடம் தடுப்பூசி குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்குகிறார்கள். தவிர கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள எல்லோரும் விளக்கேற்றுங்கள், கைத்தட்டுங்கள் என்று பிரதமரே அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைச் சொன்னதால் மத்திய அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. டிசம்பர் மாத இறுதியில் தடுப்பூசி தயாராக இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது என்று சொல்லி முடிந்த இரண்டாவது நாளிலேயே இரண்டு தடுப்பூசிக்கும் அனுமதி கொடுக்கிறார்கள். இதுபோன்று முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் மக்களின் சந்தேகத்தைத் தூண்டும்., மருத்துவர்களே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கு தயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் வேறு எந்தத் தடுப்பூசிக்கும் எதிராகப் பேசவில்லை. மருத்துவர்கள் அறிவியலை நம்புகிறார்கள். தடுப்பூசியை நம்புகிறார்கள். ஆனால், இந்தத் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய விதத்தில் மத்திய அரசின் அவசரகதிதான் பிரச்சினை.
தற்போது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவியதால் மக்கள் எந்த பயமும், கவலையும் கொள்ளவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகிறார்கள். இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருப்பதால், மக்கள் அதன் பயன்பாட்டை உணர்ந்திருக்கிறார்கள். இந்த முறை கொரோனா இளம் வயதினரையும் இதய நோய் உள்ளவர்களையும் பாதிக்கிறது என்பதால் தடுப்பூசி போட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்திருக்கிறது. ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடுதான் அதிகமாக இருக்கிறது. அதைப்போக்கி அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான ஏற்பாட்டை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்தத் தடுப்பூசி நிரந்தரப் பாதுகாப்பு அளிக்குமா?
கொரோனாவுக்கான தடுப்பூசியைத் தற்போதுதான் கண்டுபிடித்துள்ளோம். தற்போதுள்ள தகவலின் அடிப்படையில் குறைந்தது 8 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை இந்தத் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இந்தத் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நாட்கள் இருக்கும் என்று பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதனால், இது எத்தனை நாட்களுக்குப் பலன் அளிக்கும் என்று இனி வரும் காலத்தில்தான் தெரியும். தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.
ஏன் தடுப்பூசி அவசியம்?
தடுப்பூசி என்பது ஒரு வரப்பிரசாதம். கொரோனாவைப் பொறித்தவரையில் தடுப்பு நடவடிக்கை என்கிற வகையில் கை கழுவுதல், மாஸ்க் போடுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கான சங்கிலித் தொடரை உடைப்பதற்கு அதிக பலனை அளிக்கும். இதை நாம் கட்டாயமாகச் செய்ய வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். இதனுடன் தடுப்பூசியும் அவசியம். அவை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். உலகத்தில் பல நோய்கள் தடுப்பூசிகள் மூலமாக விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் கொரோனாவை விரட்டியடிக்க தடுப்பூசிகள் நல்ல பலனை அளிக்கும். இந்தியாவில் 12 கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு, பாதுகாப்பும் செயல்திறனும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நபர்களும் தடுப்பூசி போடாமல் இருப்பது அவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எல்லோரும் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!