day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

குறும்படம் மூலம் விழிப்புணர்வு – ஆனந்தி

குறும்படம் மூலம் விழிப்புணர்வு – ஆனந்தி

 


பள்ளி ஆசிரியர், சமூக சேவகர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்கிறார் ஆனந்தி. சென்னையைச் சேர்ந்த இவர்,போதி சாரிடபிள் டிரஸ்டின் நிறுவனர். மேலும் பெண்களுக்காகச் செயல்பட்டுவரும் சர்வதேச நிறுவனமான ‘இன்னர் வீல்’ அமைப்பில் இணைந்து செயல்பட்டுவருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பைச் சீர்படுத்தவும் முயன்றுவருகிறார். அதற்காக ‘போதி’ அறக்கட்டளையை நடத்திவருகிறார். தற்போது கொரோனா பொது முடக்கத்தால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிற சூழலில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துவருகிறது. அதனால், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் ஆனந்தி மற்றும் போதி நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு. டேவிட் பரத் குமார் அவர்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.சமூக நோக்கிலான இந்தச் செயல்பாட்டுக்குத் திரைத்துறை பிரபலங்கள் பலர் குரல்கொடுத்துள்ளனர். ஆனந்தி அவர்களை ‘பெண்கள் குரல்’ இதழுக்காகச் சந்தித்தோம்.

கேள்வி: பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை எப்படி வந்தது?

பதில்: நான் பார்த்த உலகத்தில், நான் பழகிய அனைவருமே உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை உள்ளவர்கள்தான். உதவி யாருக்கு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததாலும், அதற்கான நேரம், காலம் வராததாலும் முடங்கிப்போய் கிடக்கிறார்கள். உதவி செய்பவர் ஒரு இடத்திலும், உதவி தேவைப்படுவோர் வேறொரு இடத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் இணைப்பதற்கான ஒரு பாலமாகத்தான் நான் இருந்து வருகிறேன். அதாவது, இவர்களிடம் கொடுத்தால், சேர வேண்டியவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேரும் சேரும் என்கிற நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த நம்பிக்கை வந்தாலே அடுத்து நாம் செய்ய வேண்டிய செயல் சிறப்பாக அமையும். 

பெண்களுக்குக் கல்வி, திருமணம், குழந்தைகள் வளர்ப்பு, குடும்பப் பொறுப்பு என்று 40 ஆண்டுகள் கடந்துவிடும். அதற்குப் பிறகும் பொறுப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் அவற்றிலிருந்து கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பிறருக்காக என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். அதன் விளைவுதான் போதி மற்றும்  விருக்க்ஷம். கல்லூரிப் பருவத்திலேயே சக மாணவர்களுடன் சேர்ந்து சின்ன, சின்னதாக உதவிகளைச் செய்திருக்கிறேன். இப்போது அமைப்பாகச் செயல்படுகிறோம். இன்னர் வீல் அமைப்பில் ஓர் அங்கம்தான் விருக்க்ஷம் முதலில் 50 பெண்களுடன் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. நான் வசிக்கும் முகப்பேரைச் சுற்றியுள்ள 10 அரசுப் பள்ளிகளை முதலில் தத்டெடுத்தோம். அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கவும் காரணம் இருக்கிறது. கல்வி என்பது குழந்தைகளுடைய அடிப்படை உரிமை. ஆனால், பல குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கிடைப்பதில்லை. அதனால், என்னுடைய டீமை தயார்செய்து அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு அரசுப் பள்ளியாகச் சென்று அங்குள்ள தலைமை ஆசிரியரைப் பார்த்துப் பேசினோம். பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிப்பிடம் என்பது பெயரளவுக்குக்கூடப் பராமரிக்கப்ப டாமலேயே இருக்கிறது. சேர், டேபிள், மின்விசிறி, சாப்பாடு சாப்பிடுவதற்குத் தட்டு, சின்னதாக ஒரு நூலகம். இவைதான் ஒரு அரசுப் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள். இவைகூட இல்லாமல் பல பள்ளிகள் உள்ளன. முதலில் பத்து அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்தோம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆண்டு என்கிற விதத்தில் தேர்வுசெய்து பணிகளைச் செய்துவந்தோம். ஒரு பள்ளிக்கு அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதற்குக் குறைந்தது ஐந்து லட்ச ரூபாயில் இருந்து ஆறு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. 

கேள்வி: இந்தச் செலவுக்கெல்லாம் எப்படிப் பணம் கிடைக்கிறது?

பதில்: இந்தப் பணத்தைத் திரட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆரம்பத்தில் ஒவ்வொருத்தரிடமும் பணம் திரட்ட ரொம்ப சிரமப்பட்டோம். பின்னர்தான் ஒரு யோசனை தோன்றியது. எங்கள் உழைப்பைப் பணமாக மாற்ற முடிவெடுத்தோம். என்னுடைய தோழி மூலமாக அவர்களுடைய அபார்ட்மெண்ட்டில் வாடகை இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். அங்கே சின்ன, சின்னதாகக் கடைகள் திறந்தோம். கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், திண்பண்டங்கள் விற்பனை செய்தல் என்று ஒருநாள் நிகழ்ச்சி நடத்தினோம். அன்று ஒருநாள் மட்டும் நாங்கள் எதிர்பார்த்தது போன்று கணிசமான தொகை லாபமாக வந்தது. இது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு செயலில் இறங்கினாலும் அதைக் கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்ய நினைப்பேன். 

கேள்வி: வேறு எந்த வகையில் எல்லாம் உதவி செய்தீர்கள்?

பதில்: என்னுடைய நண்பர் தனியார் கல்லூரியில் பேராசியராக இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டுச் சென்றபோது, அவரிடம் படித்த ‘சூப்பர் சிங்கர்’ மாணவர் ஒருவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த மாணவர் எந்த மாதிரியான உதவி வேண்டும் என்று கேட்டபோது, நான் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும், அதற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை எனக்கு அறிமுகம் செய்துவையுங்கள் என்றேன்.அவரும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.ஆனால், இசைநிகழ்ச்சி நடத்துவதற்கான ஹால் வாடகை அதிகமாக இருந்தது. இவ்வளவு வாடகையில் இது சாத்தியமாகுமா, போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க முடியுமா என்றெல்லாம் கேட்டார்கள். காரணம், எங்கள் குழுவில் அனைவருமே இல்லத்தரசிகள்தான். இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்து முடித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த ஒரு நிகழ்ச்சியிலேயே  ஒரு பள்ளியின் அடிப்படை வசதிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கக்கூடிய அளவுக்கு நாங்கள் எதிர்பார்த்த பணம் வசூலானது. அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் ஓராண் டுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்ய முடிவெடுத்தோம். இதுவரைக்கும் மூன்று பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். கொரோனாவால் நான்காவது பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தள்ளிப்போய் உள்ளது.

கேள்வி:  போதி அறக்கட்டளை எப்படி உருவானது?

‘விருட்சம்’ அமைப்பைப் பொறுத்தமட்டில் வருடா வருடம் தலைவர் மாறிக்கொண்டே இருப்பார்கள். நாம் ஒரு பொறுப்பில் இருந்தாலும் ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு நோக்கமும் இலக்கும் இருக்கும். அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதை எல்லாத் தலைவரும் ஏற்றுக்கொள்ள முடியாது இல்லையா? அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் நானும் எனது நண்பர் திரு. டேவிட் பரத் குமார் அவர்களுடன் இணைந்து அறக்கட்டளையைத் தொடங்கினேன். டேவிட் பரத் குமார் அவர்கள் விருக்க்ஷமின் மூன்று வருட நிகழ்ச்சிகளிலும் உடன் இருந்து முழுவதும் உதவி செய்தவர்.

 ‘போதி பாடசாலை’யும் அப்படி உருவானதுதான். என்னுடன் பணிபுரிந்தவர்கள் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். ஒரு நிகழ்ச்சிக்குத் திட்டமிடுவதில் தொடங்கி அதை வெற்றிகரமாக முடிப்பதுவரை எனக்கு உதவினார்கள். என்னால் வெளியில் போய் செய்ய இயலாதவற்று அவர்கள் கூடவே இருந்து உதவி செய்தார்கள். 

எங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடத்துடன் பொதுநலன் சார்ந்த பண்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் ‘துளிர்கள்’ அமைப்பைத் தொடங்கினோம். இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு நல்ல தகவல்களைப் பாடங்கள் மூலமாகப் போதிக்காமல் கதைகள் மூலமாகவும், பாட்டு மூலமாகவும் சொல்லிக்கொடுப்பது எங்கள் நோக்கம். முதலில் குழந்தைகள் மத்தியில் ஒரு பிணைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் களையே பயன்படுத்தினோம். நாங்கள் சொல்வதைவிட அவர்கள் சொன்னால் இன்னும் நன்றாக கேட்பார்கள். அண்ணா, அக்கா என்கிற பிணைப்பை உருவாக்கிய பின்னர் நல்ல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.செடி நடுவது, அதைப் பராமரிப்பது என்று பலவும் சொல்லித்தருகிறோம். 

கேள்வி: குழந்தைகள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குறும்படம் எடுக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது?

பதில்: பெண் குழந்தை, ஆண் குழந்தை இருவருக்குமே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம். அதற்காக முதலில் ஒரு பாடலை உருவாக்க நினைத்தோம்.போதி நிறுவனத்தின் இணை நிறுவனர் டேவிட் பரத் குமார் அவர்கள் இசை அமைக்க பத்மஸ்ரீ சங்கர் மகாதேவன் பாட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான வலியினை சொல்லும் பாடல் உருவானது. பிறகு அதையே குறும்படமாக எடுக்க முடிவெடுத்தோம். இதற்குப் பலதரப்பிலும் நல்ல வரவேற்பு. எல்லோரும் ஆதரித்தனர். நடிகர், நடிகைகள் என்று பலரும் பாராட்டினார்கள். சென்னை காவல்துறை அதிகாரி லட்சுமி ஐ.பி.எஸ்., எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்.குழந்தைகள் நல வாரியத்தின் ஆதரவும் கிடைத்தது .சாரிகா குறும்படம் உருவானது.இதைப் பள்ளிகள், கல்லூரிகளில் வெளியிடவிருக்கிறோம். இதை ஒரு விழிப்புணர்வு கருவியாகவும் பயன்படுத்தவிருக்கிறோம். கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அடுத்த கல்வியாண்டிற்கான வேலையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

கேள்வி -வேறு புதிய முயற்சி ஏதேனும் உள்ளதா?

பதில் – ஜான் பீட்டர் என்னும் பதினொன் றாம் வகுப்பு படிக்கும்  மாற்றுத்திறனாளி மாண வருக்கு தற்பொழுது  உதவி செய்யும் நோக்கில் இணைந்து இறங்கி உள்ளோம். இவருக்கு இடுப் புக்குக் கீழ் எந்தவித உணர்வும் கிடையாது. இன்றுவரை டயப்பர் உதவியுடன் மட்டுமே இவர் வாழ்ந்து வருகிறார். முதுகுத்தண்டுவடம் சற்று உடைந்து இருப்பதால் இவரால் நேராக நிமிர்ந்து அமர இயலாது. இவரது தாயார் இன்று வரை இவரை தூக்கி தள்ளு வண்டியில் அமர வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். தற்பொழுது உடல் எடை கூடியதால் இவரது தாயாரின் உடல்நலம் குறைந்ததாலும் அவரால் முன்பு போல் அவரை பள்ளிக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை. ஜான் பீட்டரின் உடல்வாகுக்கு தகுந்தது போல் கஸ்டமைஸ்டு சக்கர நாற்காலி வாங்குவதற்கு உதவி கேட்டு அவரது தாயார் எங்களை அணுகினார். அவரது  மருத்துவ செலவுகள் மற்றும்  கஸ்டமைஸ்டு சக்கர நாற்காலி வாங்குவதற்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்படு கிறது.  இவருக்காக போதி சாரிட்டபிள் டிரஸ்ட் முன்னின்று இசைக்காக இணைவோம் என்ற ஒரு நிகழ்ச்சியை முகநூல் மூலம் ஏற்பாடு செய்து ஜான்பீட்டர் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு தெரிய செய்து அவருக்கான உதவிகளை கோரியுள்ளோம். கூடிய விரைவில் ஜான் பீட்டர்  அவருக்காக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியின் உதவியுடன் வெளி உலகினை யாருடைய தயவும் இன்றிகாண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!