day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஏமாற்றத்திற்குத் தற்கொலை தீர்வல்ல…

ஏமாற்றத்திற்குத் தற்கொலை தீர்வல்ல…

இளம் சமுதாயத்தினரிடம் தற்கொலை ஒரு வீரச்செயல் என்ற எண்ணமும், தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்குத் தற்கொலையே தீர்வு என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது. படிப்பில் ஆரம்பித்து தொழில், உறவு என அனைத்து வகைத் தோல்விகளுக்கும் தற்கொலை மட்டுமே முடிவு என்ற எண்ணத்தில் இருக்கும் பலரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உண்மைலேயே தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? அதற்கான தீர்வு என்ன என்பதைக் குறித்து மனோதத்துவ நிபுணர் அபிலாஷாவுடன் கேட்டோம்…

கேள்வி : தற்கொலை செய்ய நினைப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
பதில் : தற்கொலை செய்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கும். பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் மனஅழுத்தம்தான் காரணம். மனஅழுத்தம் என்பது ஒரே நாளில் வருவதில்லை. பலநாட்களாக இருக்கக்கூடிய ஒரு மனநோய் என்று சொல்லலாம்.
மனநோய் என்பது இரண்டாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ஆரம்பநிலை மனநோய். நாள்பட்ட அல்லது கடுமையான மனநோய். கடுமையான மனநோய் என்பது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான கவுன்சிலிங் கொடுக்காமல் அல்லது அவர்களின்மேல் சரியான கவனம் செலுத்தாமல் இருப்பதுவே ஆகும். எல்லாவற்றையும் நெகடிவ்வாக நினைப்பவர்களுக்கு தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதுபோன்ற நேரத்தில்தான் அவர்களுக்குத் தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் வரும். இன்னொன்று என்று பார்க்கப்போனால், மற்றவர்கள் தற்கொலை செய்துகொண்ட தகவல் கேள்விப் பட்டாலோ, அந்த சம்பவத்தை அல்லது காட்சியை நேரில் பார்த்தாலோ அல்லது மற்றவர்கள் அதைக் கூறும்போது, அதில் தன்னுடைய மனத்தூண்டுதலால் தானும் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் வரும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் வேலை இழக்க நேரிட்டால் அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டுத் தற்கொலை செய்துகொண்டால், தனக்கும் அதே நிலை ஏற்படும்போது தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற (Copycat suicide) எண்ணம் வரும்.
ஒருசிலர் ஒரு லட்சியத்துக்காகத் தற்கொலை செய்துகொள்வார்கள். அதாவது suicide bomber ஆக செயல்படுவர். அதுவும் தற்கொலைதான். அதேபோல் ஒருசிலர் தன்னுடைய கோபத்தை வெளிகாட்டுவதற்காகவோ அல்லது மற்றவர்மேல் உள்ள கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தன்மேலேயே நெருப்பை பற்ற வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வது. மேலும் (crisis situations) அதாவது, நெருக்கடியான காலகட்டம். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் கடன் தொல்லை, அவமானப்படுத்துதல், ஏமாற்றமடைதல் இதுபோன்ற காரணங்களுக்காகவும் தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.
தற்போது இளைஞர்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலை என்னவென்று பார்த்தால் வாழ்க்கை மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டதாகவும், காதல் தோல்வி, கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்படுவதால் ஒருசிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மேலும் தேர்வு பயம், தேர்வில் தோல்வி ஆகிய காரணங்களுக்காகவும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம். ஆகவே, தற்கொலை என்பது ஆட்களுக்குத் தகுந்தாற்போலும், சூழ்நிலைக்குத் தகுந்தாற்போலும், சமூகத் திற்கு தகுந்தாற்போலவும் மாறுபடுகிறது. வெளி நாடுகளில் எல்லாம் கணவன் மனைவியை விட்டுவிலகிப் போறதுக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வதில்லை. நம் நாட்டில் மட்டும்தான் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற தற்கொலை செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
கேள்வி : சமீபகாலமாக இணையதள விளையாட்டுக்களால் (Online Games) நிறைய பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : நான் ஏற்கனவே சொன்னதைப்போல (crisis situations) அதாவது, நெருக்கடியான காலகட்டம். ஏமாற்றம், பணஇழப்பு ஏற்படும்போது இதை வீட்டில் சொல்வதற்குப் பயந்து எடுக்கிற ஒரு முடிவுதான். இணையதள விளையாட்டு என்பது ஒரு போதை மாதிரியானது. நம்முடைய மூளையில் ஒரு பகுதியில் வந்து பிரஷர் கொடுப்பதால், திரும்பத் திரும்ப செய்யத்தூண்டும். இதைதான் கேம்ப்ளிங் என்று சொல்கிறோம். இதைபோன்று கேம்ப்ளிங்கில் இருந்து மீண்டு வரமுடியாதவர்கள் ஒருவிதக் குற்ற உணர்ச்சியில் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள். பணத்தை இழந்துவிட்டோமே என்பதைவிட இந்தப் பழக்கத்தை விட முடியவில்லையே என்ற விரக்தியில் நிறையபேர் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஒருசில பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்த பணத்தை இழக்கும்போது அல்லது எதிர் திசையில் இருந்து மிரட்டல் வரும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எந்த ஒரு நேரத்திலும் உதவிகள் கிடைக்காதபோது இதுதான் முடிவு என்று எண்ணும்போது அல்லது அவர்களுக்குள்ளேயே பிரச்சனையை வைத்துக்கொண்டு எதையும் பேசாமல் இருக்கிறார்களோ அதுமாதிரியான நேரத்தில் இதுபோன்ற எண்ணம் வரும். அதுமட்டுமல்லாமல் கூட இருக்கின்றவர்களின் தூண்டுதல், கேலி, கிண்டலுக்கு உள்ளாவதாலும் கூட இந்தத் தற்கொலை எண்ணம் வரும். முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நிறையவே காணப்பட்டது. இப்போது அது குறைந்துகொண்டு வருகின்றன.
கேள்வி : சமீப காலமாக சிறு சிறு பிரச்சனைக்கெல்லாம் குழந்தைகள் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன?
பதில் : இதற்கெல்லாம் பெற்றோர்தான் முழுக்க முழுக்க காரணம். ஏனென்றால், முதலில் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்துவிடுகிறார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களைக் கண்டிக்கும்போது குழந்தைகளால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் கண்டிப்பும் இருக்க வேண்டும்.
பெரியவர்களுடைய எண்ணத்தில் இருந்து குழந்தைகளைக் கண்டித்துவிட்டு, அதை குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு. அதேபோல் குழந்தைகளிடம் சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே குறைந்துவிட்டது. நான் முதலில் சொன்னதுபோன்று கீழே விழுந்துவிட்டால் திரும்ப எழுந்துநிற்கவே முடியாதது போன்று, என்னைத் திட்டுவதற்கு இவர்கள் யார்? என்று நான் என்னும் அகங்காரத்தில் (Egoistic) குழந்தைகள் இருக்கிறார்கள். அதாவது (selfrespect) சுயமரியாதையை எதிர்பார்க்கிறார்கள் குழந்தைகள். பெற்றோர்கள் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசும்போதும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். முன்பெல்லாம் பெற்றோரிடம் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சிறிது நேரத்தில் சமரசம் ஆகிவிடுவார்கள். இப்பொழுது அப்படி இல்லை.
குழந்தைகள் எல்லாம் ரத்தத்தைப் பார்த்தாலோ அல்லது பிணத்தைப் பார்த்தாலோ மயங்கி விழுந்த காலம் எல்லாம் போச்சு. ஆனால், இக்காலக்குழந்தைகள் எல்லாவற்றையும் சர்வசாதாரணமாகக் கையாளுகிறார்கள். அந்தந்த வயதுக்கேற்ற காலகட்டத்தில் அந்தந்த அச்சம், பயம் இருக்க வேண்டும். குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள், எப்படி வளர்கிறார்கள், என்ன வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் என்னமாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். முன்பெல்லாம் நாம் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். ஏதாவது ஒன்று என்றால் சக சொந்தபந்தங்களிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு காண்போம். இப்பெல்லாம் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிடப் பொறுைமயும் இல்லை, நேரமும் இல்லை. அதனால் குழந்தைகளுக்கு விரக்தி, மனசோர்வு ஏற்படுகிறது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆள் இல்லாததுமே இதுபோன்ற தற்கொலை முடிவுக்குக் காரணமாக அமைகிறது.
கேள்வி : வாழ்க்கையே போரடிக்குது, பயனற்றதாக அமைந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : இதுபோன்று நினைப்பவர்கள் கேன்சர் மருத்துவமனைக்கோ அல்லது மனநல மருத்துவமனைக்கோ ஒருநாள் சென்று வரவேண்டும். வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பது, வாழ்க்கையை இழந்துவிட்டுத் தவிப்பவர்கள் மத்தியில்தான் பார்க்க முடியும். எத்தனையோ பேர் அடுத்த வேளை சாப்பாடுகூட இல்லாமல் இருக்கிறார்கள். பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். சுயமரியாதை இல்லாமல், கல்வி இல்லாமல், கடன் தொல்லையில் இருக்கிறார்கள்.
எல்லோருக்குமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. ஒருசிலரைப் பார்க்கப்போனால் குடும்பமே இல்லாமல் இருக்கிறார்கள். தனியாகவே இருக்கிறார்கள். எப்பொழுதுமே நமக்குக் கிடைத்ததை வைத்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நன்றி விசுவாசத்தோடு இருக்க வேண்டும். நாம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் நம்மைச்சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். உதவி செய்யவில்லை என்றாலும் கூடப் பரவாயில்லை. தொல்லைகொடுக்காமல் இருக்க வேண்டும். முன்பெல்லாம் நன்மை செய்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக் கெடுதல் செய்பவர்கள் இருந்தார்கள். இப்போது அப்படியில்லை. எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. நன்மை செய்வதற்கு யாரும் ரிஸ்க் எடுக்க நினைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் உதவி செய்வதில் லாப, நஷ்டக்கணக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். உதவி செய்வதை எல்லோரும் வியாபாரமாகப் பார்க்கத்தொடங்கிவிட்டனர். எந்திரத்தனமாக இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஒரு சிறு உதவி செய்துவந்தாலே அதில் ஒரு சந்தோசம் இருக்கும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நமக்கு மக்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பயம் இல்லாமல் இருக்கும் இந்த சமூகம். அளவுக்கு அதிகமாகப் பணமோ, பொருளோ ஒருவரிடத்தில் இருந்தால், அதில் ஒரு சிறு பகுதியை இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவி செய்துவருகிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் அங்கே தவறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்யலாம். அது பொருளாகவோ அல்லது பணமாகவோ இருக்கலாம்.
கேள்வி : வேலைப்பளுவுக்கு ஆளாகிறவர்கள் அதில் இருந்து மீண்டு வருவதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : காசு, பணம் வருகிறது என்பதற்காக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யக்கூடாது. நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு செய்தாலே போதுமானதாகும். உடலையும், மனசையும், உறவுகளையும் வருத்திப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானத்துக்கு ஆசைப்பட்டு இரவு, பகல் என்று பாராமல் வேலை செய்து பின்னர் அதை மருத்துவமனைக்குச் செலவு செய்வது என்பது முட்டாள்தனமான செயலாகும்.
கேள்வி : நிறைய பெண்கள் குடும்ப பொறுப்பு மட்டுமல்லாமல் வேலைக்கும் சென்று வருகிறார்கள். வேலைப்பளு அதிகம் உள்ள பெண்களுக்கு ஆண்கள் எவ்வாறு உதவ வேண்டும்?
பதில் : உண்மையைச் சொல்லப்போனால் ஆண்கள், பெண்களைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த சமூகம் அல்லது சுற்றியுள்ளவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள் என்று சில வேலைகளை ஆண்கள் செய்யத் தயங்குகிறார்கள். குறிப்பாக, மாடியில் போய் துணி காய வைப்பதைக்கூட சில ஆண்கள் செய்வதில்லை. வீட்டில் ஆண், பெண் இருவரும் விட்டுக்கொடுத்துப் போனாலே போதுமானதாகும். அதேபோல் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்குக் குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவி செய்தாலே போதும். அவ்வாறு செய்தாலே அவர்களுக்கு மனஅழுத்தம் குறையும். வேலைப்பளு மற்றும் வீட்டுவேலை அதிகமானால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகும். வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒருசில மணித்துளிகளை ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய நண்பர்கள்், குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதற்கு, மேலும் தனக்கென்று பிடித்தமான வேலைகளை செய்வதற்கு. அவ்வாறு அவர்கள் மனம்விட்டுப் பேசும்போதும் அவர்களுடைய மனஅழுத்தம் குறைய நிறையவே வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!