day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

எல்லைமீறும் ஆசிரியர்களை என்னசெய்யலாம்? – வந்தனா

எல்லைமீறும் ஆசிரியர்களை என்னசெய்யலாம்? – வந்தனா

சென்னையில் உள்ள சில தனியார் பள்ளி ஒன்றின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் தவறாக நடந்துகொள்வதாக மாணவிகள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து வேறு சில தனியார் பள்ளிகளிலும் பாலியல் அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பெருந்தொற்றுக் காலத்தில் குறிப்பாக இரண்டாம் அலையில் ஆன்லைன் வழியான பாலியல் வன்முறை அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் பெரும்பான்மையான பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைனில் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் என்பது பற்றித் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இது காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது அது வெளிப்படும்விதம்தான் (Mode) மாறியிருக்கிறது.
ஆன்லைன் சீண்டல் என்றால் உடல்ரீதியான துன்புறுத்தலை மட்டும்தான் நாம் பேசுகிறோம். ஆனால், இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. ஒருவரை ஒதுக்கிவைப்பது, இழிவாகப் பேசுவது, மனரீதியாகக் காயப்படுத்துவது போன்றவை எல்லாமே ஒருவிதமான துன்புறுத்தல்தான். ஒருவரைப் பற்றிக் கீழ்த்தரமாகப் பேசுவது, அநாகரிகமாக மெசேஜ் பண்ணுவது, ஆபாசமான படங்களை அனுப்புவது, பேசுவது போன்றவையும் இதில் அடங்கும். இவற்றை எதிர்கொள்ளும்போது ஒரு பெண் நிச்சயம் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும்.
இப்போது இதுபோன்ற ஆன்லைன் துன்புறுத்தல் பற்றி ஓரளவுக்குப் பொதுவெளியில் பேசத் தொடங்கியிருக்கிறோம். தற்போது ஒரு பள்ளியில் இருந்து புகார் வெளியில் வந்த உடனே பல பள்ளிகளில் இருந்தும் மாணவிகள் புகார் சொல்கிறார்கள். இதை சோஷியல் சைக்காலஜி என்று சொல்வார்கள். அதாவது ஒரு குழு ஒன்றைச் செய்வதால் அதைப் பார்த்து இன்னொரு குழுவும் அதைப் போலவே செய்யும். அவர்களைப் போல நாமும் புகார் செய்யலாம் என்று மற்ற மாணவியர் நினைத்திருக்கலாம். ஆனால், இதற்கு நேர் மாறாகவும் நடக்கக்கூடும். அவர்கள் சொன்னால் சொல்லட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்று முடிவெடுக்கவும் கூடும்.
ஒரு மாணவி துணிவுடன் வந்து புகார் அளித்தால் அந்த மாணவியின் பெற்றோர் அவருக்குப் பக்கத்துணையாக இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கும் மன தைரியத்தை அளிக்கும். அதனால்தான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனக்கும் இப்படி நடந்தது என்று சிலர் சொல்கின்றனர். ஒருவர் தைரியமாக முன்வந்தால், தொடர்ந்து மற்றவர்களும் முன்வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசும்போதுதான், தீர்வு கிடைக்கும். ஆனால், அதை எந்த அளவுக்கு முன்னோக்கி எடுத்துச்செல்கிறார்கள் என்பது முக்கியம்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதில் சமூகம், உளவியல், அரசியல் என்று பல காரணங்கள் உள்ளன. எந்த அளவுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும், பிரச்சினையை எந்தத் திசையில் எடுத்துச் செல்கிறார்கள் என்பதும் மிக முக்கியம். மேலும், இதுபோன்ற பல விசயங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டு பின்பு காணாமல் போய்விடும்.
ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கபடுவார்கள். அதனால் இது குறித்த விழிப்புணர் வைப் பெற்றோர் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். இப்படி நடந்தால் துணிந்து சொல்ல வேண்டும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் நட்பாகப் பழகும்போது இது நடக்கும். பாலியல் கல்வி என்பதைப் பற்றி நாம் பல காலமாகப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதைச் செயல்படுத்துகிறார்களா என்றால் இல்லை. ஒருசில பள்ளியில் அதைப்பற்றிப் பேசுவதே இல்லை. பெற்றோர், குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதைச் சொல்லிக்கொடுப்பதைப் போல ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, எது சரியான நடத்தை என்பதையும் சொல்லித்தர வேண்டும்.
குழந்தைகள்மீதான பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் அந்தக் குழந்தைகளுக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். மிகவும் பழக்கமானவர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் இவர்கள்தான் செய்வார்களே தவிர முகம் தெரியாத, அறிமுகம் இல்லாத வெளிநபர் செய்யும் வாய்ப்பு குறைவு. ஆன்லைனில் மனரீதியான துன்புறுத்தல் அதிகம் நடக்கும்.
இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன. சைபர் புல்லிங் செய்கிறவர்கள் கண்டிப்பாக ஒருவிதமான மனநோய் அதாவது ஆளுமைத்தன்மை கோளாறால் பாதிக்கப்பட்டு இதுபோன்று நடக்கலாம். இரண்டாவது, அவர்களும் இப்படியான பாதிப்புக்கு ஆளானவராக இருந்திருக்கலாம். அவர்களுக்கு இதை யாராவது செய்திருக்கலாம். ஒருவிதப் பழிவாங்கும் எண்ணத்தில் இப்படிச் செய்திருக்கலாம். கவன ஈர்ப்புக்காகவும், இப்படிச் செய்து பார்க்கலாமே என்கிற ஆர்வத்தாலும் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், சிந்திப் பதில் தொந்தரவு ஏற்பட்டு இருப்பவர்கள்கூட இதுபோன்று செய்வார்கள். முழுக்க, முழுக்க ஆய்வு செய்து பார்த்தால் ஒரு நார்மலான மனிதன் இதுபோன்ற செயல்களில் கண்டிப்பாக ஈடுபட முடியாது. மனநோயுடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் இந்தச் செயலில் ஈடுபட முடியும். இவர்களுக்கு மனரீதியான சிகிச்சையோ ஆற்றுப்படுத்துதலோ செய்யவில்லை என்றால், அவர்கள் இந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டேதான் இருப்பார்கள். தண்டனை கொடுப்பது என்பது மட்டுமே தீர்வாகாது. மனநன ஆலோசனையும் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும்.
மனசோர்வானவர்களோ தாழ்வு மனப்பான்மை அல்லது வீட்டில் ஏதாவது பிரச்சினை, தனிமையாக இருக்கிற குழந்தைகளோதான் இதுபோன்ற குற்றங்களுக்கு எளிதில் இலக்காகிறார்கள். பலவீனமான குழந்தைகள்தான் குற்றம் செய்கிறவர்களின் இலக்கு. உணர்வுரீதியாக அந்தக் குழந்தைக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தவறாக நடப்பார்கள். அதனால், குழந்தைகளின் மன நலம் குறித்த அக்கறை அவசியம்.
எந்தவகையான குற்றமாக இருந்தாலும் புகார் செய்ய வேண்டும். அதற்கான விழிப்புணர்வு முதலில் பெற்றோருக்கு இருக்க வேண்டும். பல துறைகளிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இது குற்றங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!