day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

எதை  நினைக்கிறோமோ  அதை அடைவோம்! – சௌந்தரி

எதை  நினைக்கிறோமோ  அதை அடைவோம்! – சௌந்தரி

பெண்கள் ஸ்கூட்டி ஓட்டினாலே பலரும் முகம்சுளிப்பார்கள். இதில் ஆண்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதாக நம்பப்படும் பைக்கை ஓட்டினால் சொல்லவே தேவையில்லை. அதுவும் பைக் ரேஸில் பங்கேற்றாலோ, அவர்களை எல்லாம் ‘நல்ல பெண்கள்’ என்கிற வரையறைக்குள் அடக்க சமூகம் யோசிக்கும். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதித்துக்காட்டியவர் சௌந்தரி. சென்னையில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பைக் ரேஸ் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

இப்படியொரு போட்டியை நடத்துவதற்குக் காரணம் என்ன?

நான் பைக் ரேஸிங் பயிற்சிபெற ஆரம்பித்த காலத்தில், இந்தத் துறையில் பெண்கள் அதிகமாக இல்லை. ஆனால், இப்போது பலபேர் பைக் ரேஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். அவர் களுக்காக இப்படியொன்று நடத்தலாமே என்று இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தை நான் அணுகினேன். அப்போது கோவிட் தொற்று அதிகம் இருந்ததாலும் ஊரடங்காலும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வருடம்தான் அது சாத்தியமானது. நண்பர்கள் பலரது  உதவியோடு மார்ச் 3ஆம் தேதி போட்டியை நடத்தினோம். பைக் ரேஸ் என்றாலே தெருவில் தாறுமாறாக வண்டி ஓட்டுபவர்கள், அவர்களால் பல விபத்துகள் நேரும் என்று எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தை மாற்றி தொழில்முறை ரேஸிங் என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அதற்கான முதல் படிதான் பெண்களுக்கான இந்த ரேஸிங். 

பைக் ரேஸிங்கை இந்திய விளையாட்டு கவுன்சில் அங்கீகரிக்கிறதா?

நான் 2013இல் பைக் ரேஸிங் ஆரம்பித்தேன், அப்போதெல்லாம் பெண்களுக்கென்று தனியாகப் போட்டி கிடையாது. ஆண்களுடன்தான் போட்டிபோட வேண்டும். 2016இல் பெண்களுக்கென்று தனியாக ஒரு பிரிவு கொண்டுவந்தனர். அதிலும் பல போட்டிகளில் பங்குபெற்றுப் பல முறை வென்றுள்ளேன். சென்னையில் Madras Motor Sports Club தான் 75 வருடங்களாகப் போட்டி களை நடத்திவருகின்றனர். அதேபோல் FMSC women in motor sport என்று  ஒன்றை உருவாக்கி பெரிய அளவில் பெண்கள் பங்கெடுக்க உதவிபுரி கின்றனர். இவர்களின் அனுமதி பெற்றுத்தான் நாங்கள் இந்தப் போட்டியை நடத்தினோம். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் ரேஸர்கள் அதிகாரிகளை வைத்து நடத்தப்பட்ட முதல் ரேஸிங் போட்டி இது. 

பைக் ரேஸிங் என்றாலே ஆபத்தானது என்கிற பயம் இருக்கிறதே?

பயம் என்பது எல்லா விளையாட்டிலும் இருக்கிறது. நடந்து செல்லும்போதும், பேருந்தில் பயணிக்கும்போதும் கூட அசம்பாவிதங்கள் நடக்கலாம். நமக்குப் பிடித்த விஷயங்களை நோக்கி ஓடும்போது பயம் இருக்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் பைக் ரேஸில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் முன்னேறிச் செல்ல முடியாது. 

நான்  ஆறாம் வகுப்பு படித்தபோதே பைக் என்றால் பிடிக்கும். பஜாஜ் 100 சிசி வண்டியைத்தான் முதலில் ஓட்டினேன். அதன்பின்தான் எல்லா வண்டிகளையும் ஓட்டினேன். முன்பெல்லாம் தெருவில் ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டால்கூடப் பெண் மீது பழியைப் போடுவார்கள். இப்போது அந்த எண்ணம் கொஞ்சம் மாறிவருகிறது.  வண்டி என்பது சாதாரண ஒரு கருவி, அதனைப் பெண்களும் கையாளலாம் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறார்கள். எதுவாக இருந்தாலும் நல்ல பயிற்சியோடு செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பைக் ஓட்டும்போது ஹெல்மெட், கிளவுஸ், ஷூ என்று அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் அணிய வேண்டும். 

உங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்…

சிறுவயதில் எனக்கு பைக் பிடிக்கும். ஆனால்,  பைக் ரேஸ் பற்றி ஏதும் தெரியாது. அப்போது என் பெற்றோர் `12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றால் பைக் வாங்கித் தருகிறேன்’ என்று சொன்னார்கள். நானும் நல்ல மதிப்பெண் எடுத்தேன். மருத்துவப் படிப்பைத் தேர்தெடுக்கச் சொன்னார்கள். ஆனால் நான், இதுதான் என் பாதை என்று தெளிவாக இருந்தேன். அதன் பின் இந்தப் பாதையில் வந்து 2013இல் ஒரு வெற்றியைக் கண்டேன். அதன்பின் கல்யாணம், குழந்தை என்று ஆனாலும் என் பாதையில் தடையின்றிச் சென்றுகொண்டுதான் இருக்கிறேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன். பலரும் திருமணத்திற்குப் பின் ஏன் இதெல்லாம் என்று கேட்டடாலும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் என் கனவை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருக்கிறேன். என் கணவர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார். என் அத்தை, என் மகன் எல்லோரும் நான் பைக் ஓட்டுவதைப் பெருமை யாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் நான் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க முடிகிறது. 

மறக்க முடியாத நிகழ்வுகள் என்ன?

 முதலாவது, இந்தியா முழுதும் சென்ற பயணம். இந்தப் பயணத்திற்கு முதல் காரணமே பெண்கள் மீதான பாலியல் வன்முறைதான். பலரும் இதைப் பற்றிப் பேசவே தயங்குகின்றனர். இதைப் பற்றிப் பேசினால் மட்டுமே அந்தத் தவறு நடக்கும்போது குழந்தைகள் நம்மிடம் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வைப் பரப்பவே இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். நல்ல தொடுதல், தீய தொடுதல் என்று தொடங்கி எங்களுக்குத் தெரிந்த பல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய்ச்சேர்த்தோம். அதற்கு நடிகர் கமல் ஹாசன் கையால் இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வாங்கினேன். அதேபோல் 2013இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்தநாளன்று 6,666 ஹெல்மெட் கொடுத்தார்கள். அதன் முதல் ஹெல்மெட்டை ஒரு பெண் ரேஸரான எனக்குக் கொடுத்தார்கள். இவை இரண்டும் மறக்க முடியாத நிகழ்வுகள். 

இந்தியா முழுவதும் சென்ற பயணம் குறித்துச் சொல்லுங்கள்?

பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வுக்காக அந்தப் பயணத்தை மேற்கொண்டேன். பலரும் என்னிடம் கேட்டது, `உனக்கு அந்த நிலை வந்தால் என்ன செய்வாய்’ என்பதுதான். அதற்கு நான், ‘இந்த உலகத்தில் நான் பார்க்கும் நபர் கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை; சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் மனிதனை மாற்றும்’ என்றேன். காலையில் பயணத்தைத் தொடங்கினால் இரவு ஏதேனும் ஓர் இடத்தில் பத்திரமாகத் தங்கிவிட வேண்டும்.  இரவில் பயணிப்பது ஆபத்தானது. மிருகங்கள் வரலாம், பெரிய லாரிகள் வரும். ஆதலால், பாதுகாப்பில்லை என்பதில் உறுதியாய் இருந்தேன். காஷ்மீர் மாதிரியான இடங்களுக்குச் சென்றபோது மாதவிடாய்க் காலத்தில் கழிப்பறை இருக்காது. அப்போது மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போதெல்லாம் நான் நினைத்தது இது நமக்கு மட்டும் வரும் பிரச்சினை அல்ல, இங்கு உள்ள எல்லாப் பெண்களுக்கும் இருப்பதுதான்.  இதனால், நாம் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளக் கூடாது என்ற முடிவோடு இருந்தேன். சில நேரங்களில் பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்தைக் கவனமாக நினைவு வைத்துக்கொண்டு அங்கிருக்கும் கழிவறையைப் பயன்படுத்தினேன். சில இடங்களில் நாப்கின் வாங்க கடை இருக்காது. அதையும் சமாளித்தேன். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை சென்றேன். உணவிற்காக மட்டுமே  பயணத்தை நிறுத்துவேன். 16, 210 கிலோ மீட்டரை 42 நாட்களில் 150 cc வண்டியில் நான் கடந்துள்ளேன். அதுமட்டுமன்றி,  118 மணிநேரத்தில் 5,800 கிலோமீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளேன். அந்தச் சாதனையில்  ஒருநாளைக்கு 1 மணி நேரம் தூக்கமே பெரிய விஷயமாக இருந்தது.  

அந்தச் சாதனையை செய்து முடிக்கும் போது கால்களெல்லாம் வீங்கி உடலில் உயிர் இருப்பதே தெரியாமல் அங்கே போய்ச்சேர்ந்தேன். அப்போதுதான் புரிந்தது  மனதளவில் நாம் என்ன நினைக்கின்றோமோ, அதையே  அடைவோம் என்று. என் தலைக்கவசத்தில் WE GO WHERE WE LOOK என்று எழுதி இருப்பேன். இது ரேஸிங்கில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான். 

இந்தக் காலத்து இளம்பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாவற்றிற்கும் எளிதில் கோபப்படுகிறார்கள், வருத்தப்படுகிறார்கள். மனதளவில் வலுவிழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் யாரென்று யாருக்கும் நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்தத் துறையில் சாதிக்க நினைத்தாலும் அதனை நோக்கிப் பயணம் செய்யுங்கள். வேறு பாதை மாறிச் சென்றுவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மூன்று மாதமோ, மூன்று வருடமோ கண்டிப்பாக வெற்றியடைவீர்கள்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!