day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

உயர்வு மண்ணைப் பொன்னாக்கும் பெண் ஓபுஉஷா செந்தில்

உயர்வு மண்ணைப் பொன்னாக்கும் பெண் ஓபுஉஷா செந்தில்

கிராமத்தில் பிறந்து கற்பனையில் மிதந்து சுடுமண் நகைகளை வடித்து வெற்றி கண்டவர்தான் ஓபுஉஷா செந்தில். முயன்றால் எந்தப் பெண்ணும் சாதனைகளின் உயரம் தொடலாம் என்று நிரூபித்துக் காட்டுபவர் அவர்.

சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஓபுஉஷா. அந்தக் கிராமத்தில் பெண் பிள்ளைகளை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். வேலைக்கும் அனுப்ப மாட்டார்கள்.

ஓபுஉஷாவின் தந்தை ஒரு கைத்தறி நெசவாளி. அப்போதே வண்ணங்களையும் நவீன வடிவங்களையும் பார்த்து உற்சாகம் அடைந்திருந்தார் ஓபுஉஷா. கைவினைப் பொருட்களில் ஆர்வம் கொண்டிருந்த அவரை வெளியே செல்ல வீடோ ஊரோ அப்போது அனுமதிக்கவில்லை.

பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்றார் ஓபுஉஷா. படிப்பை முடிப்பதற்கு முன்னாலேயே அவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள் பெற்றோர்.

ஓய்வு நேரத்தில் கடைவீதியில் பார்த்த டெரகோட்டா எனப்படும் சுடுமண் நகைகள்தான் ஓபுஉஷாவின் வாழ்வை மாற்றின. டெரகோட்டா நகைகளுக்குக்  கிடைத்த விலை அவரை மயங்க வைத்தது. எப்படியும் அந்தக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகத்தை வளர்த்துக்கொண்டார் அவர்.

ஒரு வருடம் கழித்து டெரகோட்டா எனப்படும் சுடுமண் நகைகளை வடிவமைக்கும் பயிற்சியும் ஓபுஉஷாவுக்குக் கிடைத்தது. ஆனால் கற்றுக் கொடுத்தவர் சாதாரண “Air Dry Clay” வில் தான் கற்றுக் கொடுத்தார். அதனால் கடைகளில் விற்கும் நகைகளுக்கும், ஓபுஉஷா செய்த நகைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

தொழில்முறையிலான நகைகளைத் தன்னால் செய்ய முடியாதோ என்ற கவலையில் ஆழ்ந்தார் ஓபுஉஷா. முயற்சி திருவினை ஆக்கும் என்பதை அவர் அறிந்தார்.

குடும்பத்தாரின் ஒத்துழைப்பாலும் ஊக்குவிப்பாலும் டெரகோட்டாவில் நகைகள் செய்வதற்கான களிமண்ணையும் வண்ணங்களையும் தேடிப் பிடித்தார் ஓபுஉஷா. அதில் தன்னுடைய கற்பனை கலந்து புதிய விதமான நகைகளை வார்த்தெடுத்தார் இந்தக் கலைப் பெண்மணி.

’ஒரு டெரகோட்டா நகையினை உருவாக்குவது மிகவும் எளிதானது அல்ல. மனதை ஒருமுகப்படுத்தி வேறு வேலை களைப்  பற்றிய எந்த சிந் தனையும் இல்லாமல் செய்தால் மட்டுமே அதனை நேர்த்தியாக உருவாக்க முடியும்’ என்று உறுதியுடன் கூறுகிறார் ஓபுஉஷா.

’முதலில் மண் ஈரமான பதத்துடன் இருக்கும்போதே நமக்குத்  தேவையான டிசைன்களை வடிவமைக்க வேண்டும். பிறகு 4 நாட்கள் வெயிலில் வைத்து உலர்ந்த பின்பு அதனைச் சுட வைத்து அதன் மீது பெயிண்டிங் செய்ய வேண்டும்’ என்று கண்களில் ஆர்வம் பொங்கக் கூறுகிறார் அவர்.

தான் வடிக்கும் நகைகளில் தனித்துவம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதற்காக ஓவிய வகுப்புகளுக்கும் அவர் சென்று பயின்றார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை அவருக்கு. ஓவியங்களைக்  கற்றுத் தரும் விதம் ஒருவிதமாகவும், தான் கற்றுக்கொள்ள வேண்டிய விதம் வேறு விதமாகவும் இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். தனக்கான நுணுக்கங்கள் தனியானவை என்று அவர் புரிந்துகொண்டார். அந்த நுணுக்கங்களை அவர் டெரகோட்டா நகைகளில் பயன்படுத்தினார். தன் கற்பனை உயிர்பெறுவதை உணர்ந்து புல்லரித்துப்போன அவருக்கு இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

ஓபுஉஷா வடித்த டெரகோட்டா நகைகளுக்கு முதல் பாராட்டு குடும்பத்திலேயே கிடைத்தது. நண்பர் களும் அவருடைய படைப்புகளைப் பார்த்துப்பாராட்டி புகழ்ந்துரைத்தனர். இது அவருக்கு மேலும் உற்சாகம் அளித்தது.

அவருடைய நகைகளை அவருடைய கணவர் ஆன்லைனில் விற்பதற்குத்  தனி இணைய தளம் உருவாக்கினார். முதல் ஆர்டர் கிடைத்ததும் ஓபுஉஷா அடைந்த உற்சாகத்திற்கு ஈடு இணை இல்லை. தன் படைப்பும் உலகின் கவனம் பெறுகிறதே என்று அவர் மகிழ்ச்சியின் எல்லைக்குப் போனார்.

அவருடைய படைப்புகளுக்கு சென்னை, கோவை, பெங்களூரு என்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆர்டர் வர ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, துபாய் போன்ற பல வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் வந்தது.

தான் உருவாக்கும் நகைகளுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமா என்று ஓபுஉஷாவால் நம்பவே முடியவில்லையாம். மகிழ்ச்சியில் அவர் திக்குமுக்காடிப் போனாராம்.

சமூக வலைதளங்களில் தன் டெரகோட்டா நகைகளின் படங்களைத்  தொடர்ந்து பதிவிட்டார் அவர். அவருடைய இன்ஸ்டாக்ராம் கணக்கைப் பலரும் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்களாம். ஆனால் அதன் மூலம் அவருக்கு வியாபாரம் பரவியதாம்.

அவருடைய நகைகளின் வடிவத்தைப் பார்த்து மயங்கிய சின்னத்திரை நட்சத்திரம் ரக்ஷிதா நகைகளை வாங்கிக்கொண்டாராம். Zee Tamil தொலைக்காட்சியில் ’நாச்சியார்புரம்’ தொடரில் அவற்றைப் பயன்படுத்தி உபயோகப்படுத்தி ஓபுஉஷாவுக்கு நல்லதொரு அறிமுகத்தை நடிகைகள் மத்தியில் ரக்ஷிதா ஏற்படுத்திக்கொடுத்தாராம்.

மற்ற நடிகைகள் நீலிமா, ஸ்வேதா, ஸ்ரீதிகாஸ்ரீ, சுஜிதா போன்றவர்களும், பாடகி மஹதியும் இந்த நகைகளை அணிந்து வலம் வருகிறார்களாம்.

ஒரு முறை நடிகை தேவயானியை ஓபுஉஷா சந்திக்க நேர்ந்ததாம். டெரகோட்டா நகைகளைப் பார்த்த அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தன்னுடைய ’ராசாத்தி’ தொடரில் அவற்றைப் பயன்படுத்திப்  பெரிய அளவுக்கான விளம்பரத்தைக் கொடுத்துவிட்டாராம்.

தன் உழைப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கும் ஓபுஉஷா தன் தொழிலில் எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

‘நான் இந்த டெரகோட்டா நகைகளை செய்வதற்கு செய்த முதலீடு 5,000 ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது நான் வீட்டிலிருந்தபடியே மாதம் 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றேன்’ என்று பெருமையாகச் சொல்கிறார் அவர்.

2018-ஆம் ஆண்டு India Business Award- 2018 (“Best Terracotta Pottery & Designer Article Collection”) என்ற விருதையும், 2019-ஆம் ஆண்டு  National Foundation for Entrepreneur Development-ஆல் நடத்தப்பட்ட 6th National  Entrepreneurship’s  Day  award-இல் “Young  Women  Entrepreneur  என்ற விருதையும் ஓபுஉஷா பெற்றிருக்கிறார்.

SPT International Peace Awards 2019 விழாவில், “Best Achiever” என்ற விருதும், Syrafills  Media & Research Pvt. Ltd-ஆல் நடத்தப்பட்ட விழாவில் “South India Women’s Achiever’s Award -2019 (“Arts & Culture”) என்ற விருதும் இவருக்குக் கிடைத்திருக்கின்றன.

ஓபுஉஷாவிடம் இப்போது நான்கு பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர் பல பெண்களுக்குப்  பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார். அதன் பயனாக அவர்கள் வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.10,000/- வரை சம்பாதிக்கின்றார்கள். பல பெண்கள் இவருடைய நகைகளை வாங்கி அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விற்றும் வருகிறார்கள். அதனால் அவர்களுக்கும் ஒரு நிலையான வருமானம் கிடைக்கிறது.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறும் ஓபுஉஷா செந்தில், தன் வெற்றிக்காகத்  தன் குடும்பத்தினருக்கும் நன்றி கூறிக்கொள்கிறார்.

சோதனைகளையும் சாதனைகளாக மாற்றத்  துடிக்கும் பெண்களுக்கு வீட்டில் இருந்தே  தொழில் செய்ய இந்த  டெரகோட்டா நகைகள் செய்வது மிகவும் சிறந்த தொழில் ஆகும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!