day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்தியப் பெண்ணியத்தின் தாய்! – சாவித்திரி பாய் பூலே

இந்தியப் பெண்ணியத்தின் தாய்! – சாவித்திரி பாய் பூலே

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று போற்றப்படுபவர் சாவித்திரி பாய் பூலே. 1831ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி பிறந்த சாவித்திரி பாய் பூலே இந்தியாவின் பெண் உரிமைகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

மகாராஷ்டிர மாநிலம் பூனே அருகே உள்ள சதாரா மாவட்டத்தின் நெய்காவ்ன் என்ற கிராமத்தில் சாவித்திரி பிறந்தார்

குழந்தைத் திருமணம் இயல்பாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் சாவித்திரிக்கு ஒன்பது வயதில் திருமணம் ஆனது. அவருடைய கணவருக்கு அப்போது 13 வயது. அவர்தான் சமூகப் புரட்சியாளராக மாறிய ஜோதிராவ் பூலே.

திருமணத்தின்போது சாவித்திரி பள்ளிக்குக்கூட போனதில்லை. இந்து சாத்திரங்களைப் படித்திருந்த ஜோதிராவ் பூலே உலகின் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்தான் என்று கருதினார். பெண்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க கல்வி அவசியம் என்று அவர் நினைத்தார். அவர்தான் சாவித்திரி கல்வி கற்று சமூகத்தை மேம்படுத்த வேண்டும் உறுதி பூண்டார். அதற்கான வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தினார்.

சாவித்திரியின் சமூகப் பயணம் அப்படித்தான் தொடங்கியது. 1848ல் பீடே வாடாவில், கணவரும் மனைவியும் சேர்ந்து இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினர். விரைவில் மூன்று பள்ளிகளை அவர்கள் அமைத்தனர். இவற்றில் நூற்றைம்பது சிறுமிகள் கல்வி கற்றனர். இவற்றின் பாடம் அரசுப் பள்ளிகளின் பாடங்களிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

பள்ளிக்கு பாடம் கற்பிக்கச் செல்கிறபோதெல்லாம் சாவித்திரிக்கு மிரட்டல்கள் வந்தன. பழமைவாதிகள் அவரை வசைபாடினர். மேல் ஜாதியினர் கீழ்மட்ட மக்களுக்குக் கல்வி எட்டிவிடக் கூடாது என்று படபடப்பு அடைந்தனர். அதுவும் பெண்களுக்கு கல்வி கிடைத்தால் அது சமூகத்திற்கு எதிராக மாறிவிடும் என்றெல்லாம் அவர்கள் கதை கட்டிவிட்டனர்.

பெண்களுக்குக் கல்வி கற்பித்தால் சாவித்திரியின் கணவருக்கு நோய் வந்து இறந்துவிடுவார் என்று அவரை பிற்போக்குச் சக்திகள் பயமறுத்தினர். எதற்கும் அஞ்சாமல் தன் கல்விப் பணியைத் தொடர்ந்தார் சாவித்திரி பாய். தன் மீது எறியப்பட்ட மாட்டுச் சாணியையும், கற்களையும் தனக்கான வாழ்த்துகளாக அவர் போற்றினார்.

சாவித்திரி ஒரு நாள் பள்ளிக்குப் பாடம் கற்பிக்கச் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வலுவான மனிதர் வழி மறித்து, விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டினார். ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. பொறுமை காத்த சாவித்திரி அந்த மனிதரை கன்னத்தில் அறைந்தார். அதைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த மனிதர் ஓட்டம் பிடித்தார். வேடிக்கை பார்த்தவர்களும் அதிர்ந்து காணாமல் போனார்கள். அதற்குப் பிறகு சாவித்திரியின் கல்விப் பணியில் பெரிய தடைகள் வரவில்லை. ஆனால் சாவித்திரியும் ஜோதிராவும் வீட்டில் இருந்தால் ஆபத்து வந்துவிடும் என்று ஜோதிராவின் தந்தை அவர்களை வீட்டை விட்டுச் சென்றுவிடும்படி கூறினார். தனியாக வீடு அமர்த்தி தமது சமூகப் பணிகளை சாவித்திரி, ஜோதிராவ் தம்பதியினர் தொடர்ந்தனர்.

தம்மோடு சமூகப் பணியையும், கல்விப் பணியையும் செய்ய விருப்பம் காட்டிய பாத்திமா ஷேக்குடன் இணைந்து சாவித்திரி கல்விச் சேவையை முன்னெடுத்தார். கல்விச் சேவைதான் சமூகத்திற்கான முதன்மை பொதுச் சேவை என்று நினைத்தார் சாவித்திரி.

1852ல் மகிளா சேவா மண்டல் என்ற அமைப்பை அவர் தொடங்கினார். அதன் மூலம் பெண்களிடையே தங்கள் உரிமை பற்றிய விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார். உரிமை அடைய போராட்டங்கள் நல்ல வடிவம் என்று அவர் கூறினார்

அந்தக் காலத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிக்கப்படும் பழக்கம் இருந்தது. இதைத் தடுப்பதற்கு, மொட்டை அடிக்கும் முடி திருத்துபவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதுதான் சரியான வழி என்று சாவித்திரியும், ஜோதிராவும் நினைத்தார்கள். முடிதிருத்துபவர்கள் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பதில்லை என்று கூறும் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள்.

1867ல் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின்போது கணவரும் மனைவியும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி உதவினார்கள்.

வாழ்வில் உடைந்துபோயிருந்த ஒரு கர்ப்பிணி விதவைப் பெண்ணின் மகனை ஜோதிராவும், சாவித்திரியும் தத்தெடுத்து வளர்த்தார்கள். சமூகத்திற்கு ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள்.

விதவைத் திருமணத்திற்காக சாவித்திரி பூலே பிரச்சாரம் செய்தார். கர்ப்பிணியாக இருக்கும்போதே விதவை ஆகிவிடும் பெண்கள் தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்வதற்கு இல்லம் ஒன்றையும் அவர் அமைத்தார்

கீழ் ஜாதி என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை, மேல் ஜாதி என்ற அடையாளப்படுத்தப்பட்ட ஒரு ஆண் காதலித்தார் என்பதற்காக அவரை கொல்ல கிராமத்தினர் தயாராக இருந்தபோது, அது போன்ற கொலைக்கு ஆங்கிலேயே சட்டத்தில் என்ன தண்டனை கிடைக்கும் என்று சொல்லி திருந்த வைத்ததாக சாவித்திரி தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்

எழுத்திலும் பெரும் ஆர்வம் காட்டினார் சாவித்திரிபாய் பூலே. அவர் ஒரு நல்ல கவிஞராகவும் இருந்தார். 1854ல் அவர்காவ்யா பூலேஎன்ற தலைப்பில் நூல் வெளியிட்டார் 1892ல்பவன் காஷி சுபோத் ரத்னாகர்என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை பதிப்பித்தார். ’போ, கல்வி கற்றுக்கொள்என்ற தலைப்பில் அவர் ஒரு கவிதையும் எழுதி வெளியிட்டார். பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை அந்தக் கவிதை எடுத்துரைத்தது

1897 சமயத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் ப்ளேக் நோய் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நோய்க்கு ஆளானவர்களை சாவித்திரிபாய் பூலேயும் அவருடைய வளர்ப்பு மகன் யஷ்வந்த் ராவும் மீட்க பாடுபட்டார்கள். ஆனால் சாவித்திரியும் கொடிய ப்ளேக் நோய்க்கு ஆட்பட்டார். அதில் இருந்து மீளாமல் அவர், 1897 மார்ச் மாதம் 10ம் தேதி காலமானார்.

ஒரு புரட்சிப் பெண்மணியின் சகாப்தம் முடிந்துபோனாலும் அவர் விட்டுச் சென்ற பெண்ணியப் பணிகள் இன்னும் தொடர்கின்றன.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!