திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு திருத்தணி சுற்றி உள்ள பல கிராமங்களிலிருந்து தினமும் 700க்கும் மேற்பட்ட புற மற்றும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மருத்துவர்கள் ஆலோசனை பெற்றுவரும், தேவைப்படும் நோயளுக்கு மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேன் மூலம் ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் வசதி மூலம் பல ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக சி.டி. ஸ்கேனில் பழுது ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஸ்கேன் பழுது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் கிறிஸ்டியிடம் இதுகுறித்து நோயாளிகள் கேட்டபோது தகுந்த பதில் கூறாமல் அலட்சியமாக பேசியதாக நோயாளிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். திருத்தணி மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் எடுக்க முடியாமல் முடங்கி உள்ளதால், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் சி.டி. ஸ்கேன் மையங்களுக்கோ நோயாளிகள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் எடுக்க ரூ.3,000க்கு மேல் செலவு ஆகிறது என்று நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே சுகாதரத்துறை அதிகாரிகள் விரைந்து இந்த பிரச்சனையில் தீர்வுக்காண வேண்டும் மற்றும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்ட திருத்தணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கிறிஸ்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தபகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.