ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள நேதாஜி குடியிருப்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட போயர் இன மக்கள் வசித்து வருகின்றனர். முன்னதாக, குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள சுடுகாட்டை கடந்த 15 தலைமுறைகளாக, போயர் இன மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில், போயர் மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை மின் மயானம் அமைப்பதற்காக இடமாக நகராட்சி தேர்வு செய்தது. இதனையடுத்து மின் மயானம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளாக, ஏற்கனவே கட்டியிருந்த கல்லறைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போயர் இன மக்களுக்கு ஆதரவாக சுடுகாட்டில் நடைபெற்றுவரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் போயர் இன மக்களுடன் சேர்ந்துக்கொண்டு ஏராளமான பொதுமக்கள் சுடுகாட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, நகராட்சி அதிகாரிகளிடம் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர். திடீரென சாலையில் 200க்கும் மேற்பட்டோர் நடந்தே சென்று மனு அளித்தது அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.